

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கான இலட்சினையை (லோகோ) முதல்வர் விஜய் வெளியிட்டார். அதை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை ஐஜி பவானீஸ்வரி பெற்றுக் கொண்டார். உடன் தலைமைச் செயலர் சாய் குமார், டிஜிபி மகேஷ் குமார் அகர்வால். படம்: ம.பிரபு
சென்னை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்த, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையை முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளன. பெண்கள், குழந்தைகள் பயமின்றி வாழும் சூழல் உருவாக்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.
தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றவுடன் 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். அவற்றில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டமும் ஒன்று. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட இந்த அதிரடிப் படையின் தொடக்க விழா சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நேற்று நடந்தது.
முதல்வர் விஜய், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் இந்தப் படையின் ரோந்து வாகனங்களின் அணிவகுப்பு நடந்தது. ஒரு ரோந்து வாகனத்தை முதல்வர் விஜய் ஓட்டினார். பின்னர் விழாவில் முதல்வர் விஜய் பேசியதாவது: நம்முடைய பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று சொன்னோம். அது தேர்தலுக்காக மட்டும் சொன்னது கிடையாது. உணர்வுப்பூர்வமாக சொன்னது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் விஷயத்தில், நமக்கு எப்போதும் ஜீரோ டாலர்ன்ஸ்தான். அதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம்.
தமிழகத்தில் இருக்கும் பெண்கள், பெண் குழந்தைகள் எல்லோரும் பாதுகாப்பாக, தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பெண்களைப் பற்றி சில செய்திகளைக் கேட்கும் போது, உண்மையிலேயே மனது பதறுகிறது. கண் கலங்குகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏன் நடக்கிறது என்பதை ஆய்வு செய்து பார்க்கும் போது, அது ஒரே இடத்தில்தான் வந்து நிற்கிறது. அது போதைப் பொருள் நடமாட்டம். அதை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். பல ஆண்டுகளாக இப்பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவால், வேர் ஆழமாக பரவி இருக்கிறது. இதை கண்டுகொள்ளாமல் விட்டவர்கள் யார் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
போதைப் பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினை இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இதை எப்படி சரி செய்ய போகிறோம் என்பதுதான் முக்கியம். அதே நேரம், பெண்கள், பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்டது மட்டும்தானா என்றால், இல்லை. இதில் சமூக ஒழுங்கும், தனி மனித ஒழுங்கும் சம்பந்தப்பட்டுள்ளது. எனவே தனி மனிதன் ஒழுக்கமாக இருந்தாலே அந்தச் சமூகம் தன்னாலே மாறும். ஒரு கட்டுப்பாட்டோடு, பொறுப்பாக இருந்தாலே பல பிரச்சினைகளைக் கட்டுப்படுத்தலாம்.
படிக்கும் இடங்கள், வேலை செய்யும் இடங்கள், பயணங்களின் போது, தினசரி வாழ்க்கையில் பயமின்றி பெண்கள் மரியாதையோடு வாழும் சூழலை உருவாக்க வேண்டும். அதுதான் நமது முதல் குறிக்கோள். பெண்களுக்குத் தொந்தரவு கொடுப்பது யாராக இருந்தாலும் அதை சகித்துக் கொள்ள முடியாது. அவர்கள் மீதான நடவடிக்கைகள் போலீஸ் துறையில் இருந்து கடுமையாக இருக்கும். குற்றப்பத்திரிகை மிக விரைவில் தாக்கல் செய்யப்படும். ஆனால் இதில் நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்படக் கூடாது என்பதை அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்காக முதல் கட்டமாக ரூ.354 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கப்பட உள்ளது. இந்த படைக்கு மட்டும் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். ஏற்கெனவே, பெண்கள் பாதுகாப்புக்காகச் செயல்படும் அமைப்புகளுக்குக் கூடுதல் பலமாகச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை செயல்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் முன்பாகவே அதை தடுக்கும் நடவடிக்கைகளில் இந்த படை முக்கிய பங்கு வகிக்கும்.
களப்பணி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்தப் படை ஈடுபடுவதால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்களில் வழக்கு விசாரணையிலும், குற்றவாளிகளுக்குத் தண்டனை வாங்கி கொடுப்பதிலும் இன்னும் அதிகம் கவனம் செலுத்த முடியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க இந்தியாவிலேயே முதல்முறையாக டிரோன் ரோந்து முறை அறிமுகப்படுத்தப்படும்.
ஓர் அரசின் தொலைநோக்கு பார்வை மற்றும் குறிக்கோள் இருந்தாலே போதும், போகிற பாதை சரியாக இருக்கும் என்று சொல்வார்கள். ஓர் அரசின் முதல் வெற்றி அந்த மாநிலத்தின் பெண்களும், குழந்தைகளும் மரியாதையாக வாழ்கிறார்களா என்பதில்தான் இருக்கிறது. அதனுடன் சேர்ந்ததுதான் மற்ற எல்லா வளர்ச்சியும். அதிலும் முழு கவனம் செலுத்துவோம். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமைச் செயலர் மு.சாய் குமார், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.