அமைச்சர் ராஜ்மோகன் |கோப்புப் படம்
திருநெல்வேலி: சட்டப்பேரவைக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்து மக்களின் கருத்தை கேட்ட பிறகே முடிவெடுப்போம் என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: மக்களுக்கு யார் நல்லது செய்வது என்பதில் ஆரோக்கியமான போட்டி இருக்கவேண்டும். மின்வெட்டு, அரிவாள் வெட்டு என்று அரசியலுக்காக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
மக்கள் பணியில்தான் நாங்கள் போட்டி போடுகிறோம். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் அனைவரும் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. திமுகவைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 40 நிமிடங்களுக்கு மேல் பேசினார். பாமகவைச் சேர்ந்த சவுமியா அன்புமணியும் நீண்ட நேரம் பேசினார். அனைவருக்குமே வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.
முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் பேசும்போது திமுகவினர் தொடர்ந்து குறுக்கீடு செய்தனர். அதற்கு முதல்வர் அளித்த பதிலடியைத்தான் அனைவரும் பார்த்தனர். சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் திமுக பங்கு கொடுக்கவில்லை. ஆனால் தவெக ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு அளித்துள்ளது.
சட்டப்பேரவையில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே புதிய சட்டப்பேரவை கட்டிடம் தேவைதான். இருப்பினும் இதுகுறித்து மக்களின் கருத்தைக் கேட்டு முடிவெடுப்போம். இறுதி முடிவை முதல்வர் எடுப்பார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வயதில் பெரியவர். அவர் தெரிவிக்கும் விமர்சனங்களை ஆக்கப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். பேச்சுக் குறைவு, செயல் அதிகம். அதுவே தவெக அணுகுமுறையாகும். நாங்கள் தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.