சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 27-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 4.5 முதல் 7.6 கி.மீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
தென்கிழக்கு அரபிக்கடல் முதல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சி வரை, சுமார் 5.8 முதல் 7.6 கி.மீ உயரம் வரை கேரளா, தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வரும் 23, 24 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
25, 26 தேதிகளில் வட தமிழகத்தின் உள் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசான மழையும், 27-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் 21 செமீமழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவடைந்து உள்ளது. இது இன்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்ற ழுத்தத்தாழ்வு மண்டலமாக வலுவடையும். இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா கடலோர பகுதிகளை சென்றடையக்கூடும்.