தமிழகத்தில் மழை

 
தமிழகம்

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் அடுத்த இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் நாளை (ஜன.2), நாளை மறுதினம் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இடையே நேற்று இரவு சென்னை, புறநகர் பகுதியில் பரவலாக திடீர் மழை பெய்தது. இதனால் மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடிய மக்கள் மழையில் நனைந்தவாறு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சென்னை உள்பட தமிழகத்தில் சில பகுதிகளுக்கும் அடுத்த இரு நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

லட்சதீவு - குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (ஜன.2), நாளை மறுதினம் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 4 முதல் 6-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 7-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 3 முதல் 5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை (குளிர்) வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக, சென்னை பெரம்பூரில் 11 செமீ, எண்ணூரில் 10 செமீ, கத்திவாக்கத்தில் 7 செமீ, விம்கோ நகர், திண்டுக்கல்லில் தலா 6 செமீ, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், சென்னை மதுரவாயல், அயனாவரம், அண்ணாநகர் மேற்கு, மணலி, கரூர் பரமத்தி, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT