சென்னை: தமிழகத்தில் கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடலோர பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 2 நாள்களில் மேலும் வலுப்பெறக்கூடும்.
தமிழகத்தில் இன்று (ஜூலை 4), கோவை, நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 5 முதல் 9-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 6 செமீ, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கோவை மாவட்டம் உபாசியில் தலா 5 செமீ, சின்கோனாவில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.