இடம்: சென்னை | படம்: ஆர்.ரகு
சென்னை: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு மழை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இருப்பினும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. சென்னையில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் கனமழை தொடர்கிறது.
சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கின. இதனால், மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளி, கல்லூரி சென்று திரும்பும் சூழல் ஏற்பட்டது. இதைச் சுட்டிக்காட்டி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், சென்னையில் நாளை செவ்வாய்க்கிழமை (டிச.2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார். அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப். இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மண்டல இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் அளித்த பேட்டியில், “காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. அதனால் சென்னையில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கக் கூடும். இருப்பினும், நாளையும் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது” என்றார்.