சென்னை, திருவள்ளூர், செங்கையில் கனமழை நீடிப்பு - வானிலை இனி எப்படி?

சென்னை, திருவள்ளூர், செங்கையில் கனமழை நீடிப்பு - வானிலை இனி எப்படி?
Updated on
2 min read

சென்னை: சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று (டிச.1) மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும் நீடிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவிய டிட்வா புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்தது. இருப்பினும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து வருகிறது. சென்னையில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்றும் கனமழை தொடர்கிறது.

டிட்வா புயல் நிலை என்ன? - இந்தச் சூழலில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: நேற்று (நவ.30) தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடதமிழகம் புதுவை கடலோரப் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல் நேற்று 5:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து அதே பகுதியில் நிலவியது.

இது வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று (டிச.1) காலை 8:30 மணியளவில் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் - வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில், சென்னைக்கு கிழக்கு - தென்கிழக்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும், புதுவைக்கு வட கிழக்கே 130 கிலோமீட்டர் தொலைவிலும், கடலூருக்கு வடகிழக்கே 150 கிலோமீட்டர் தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கு சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

அப்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப்பகுதிகளிலிருந்து வட தமிழகம் - புதுவை கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 40 கிலோமீட்டர் ஆக இருந்தது.

இது, அடுத்த 12 மணி நேரத்திற்கு வட தமிழகம் - புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு இணையாக வட திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக் குறைந்து, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அப்பொழுது, சென்னையில் இருந்து குறைந்தபட்ச தூரமானது 30 கிலோமீட்டராக இருக்கக்கூடும்.

இதன் காரணமாக, இன்று (டிச.1) தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த தரைக்காற்றும் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும்.

நாளை (டிச.2) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதன்பின் டிசம்பர் 5-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தமிழகத்தின் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நாளை சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கையில் கனமழை நீடிப்பு - வானிலை இனி எப்படி?
டிட்வா புயல்: பயிர் சேதம் கணக்கெடுப்பு பணிகளை முடுக்கிவிட முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in