தமிழகம்

ரயிலில் தவறவிட்ட ரூ.12 லட்சம் தங்கம், பணம் ஒப்படைப்பு: கல்லூரி மாணவர்களின் நேர்மைக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: ரயி​லில் தவற​விட்ட சுமார் ரூ.12 லட்​சம் மதிப்​பிலான தங்​கம், ரூ.1.91 லட்​சம் ரொக்​கம் அடங்​கிய பையை, போலீஸாரிடம் ஒப்​படைத்த 2 கல்​லூரி மாணவர்​களை ரயில்வே காவல் கண்​காணிப்​பாளர் ராஜன் நேரில் அழைத்​துப் பாராட்டினார்.

திரு​வள்​ளூர் மாவட்​டம், அயப்​பாக்​கத்​தைச் சேர்ந்​தவர் ஹீராலால் (50). இவர் அம்​பத்​தூர் ஐசிஎஃப் காலனி​யில் தங்க நகைக்​கடை மற்றும் அடகுக்​கடை நடத்​துகிறார். இவர் கடந்த 2-ம் தேதி பிற்​பகல் 3:30 மணி​யள​வில், புதிய நகைகள் வாங்​கு​வதற்​காக அண்ணனூர் ரயில் நிலை​யத்​திலிருந்து சென்னை சென்ட்​ரல் புறநகர் மின்​சார ரயி​லில் ஏறி​னார்.

பயணத்​தில் தனது தோள் பையை இருக்​கைக்கு மேலே உள்ள ரேக்கில் வைத்​து​விட்டு தூங்​கிய​தாக தெரி​கிறது. ரயில் சென்னை சென்ட்​ரல் வந்​த​போது, தூக்​கக் கலக்​கத்​தில் தவறு​தலாக வேறொரு​வரின் பையை எடுத்​துக்​கொண்டு இறங்​கி​னார். பின்னர் சவு​கார்​பேட்டை சென்று பார்த்​த​போது, தனது பை மாறியதை உணர்ந்த ஹீராலால், உடனடி​யாக சென்னை சென்ட்ரல் ரயில்வே காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார்.

மாணவர்​களின் நேர்​மை: இதற்​கிடையே, லயோலா கல்​லூரி​யின் 3-ம் ஆண்டு மாணவர் ஜெயஸ்​வேல் (19), டிஆர்​பிசிசிசி இந்து கல்லூரி​யின் 3-ம் ஆண்டு மாணவர் கமலேஷ் (20) ஆகிய இரு​வரும் ஹீராலாலின் பையை ஆவடி ரயில்வே காவல் நிலை​யத்​துக்கு எடுத்து வந்​தனர். தாங்​கள் ரயி​லில் வந்​த​போது தங்​களது பை மாற்றி எடுத்​துச் செல்​லப்​பட்​ட​தாக​வும் ரேக்​கில் இருந்த பையை எடுத்து வந்​த​தாக​வும் கூறினர்.

மாணவர்​கள் ஒப்​படைத்த அந்​தப் பையில் 153.38 கிராம் தங்க நகைகள், 30 கிராம் வெள்ளி மற்​றும் ரூ.1.91 லட்​சம் ரொக்​கப் பணம் இருந்​தன. இதையடுத்​து, அந்​தப்பை சென்ட்​ரல் ரயில்வே காவல் நிலை​யத்​துக்கு கொண்டு வரப்​பட்​டது. அங்கு ஹீராலாலை வரவழைத்​து, ரயில்வே காவல் ஆய்​வாளர் அமலாரத்​தினம் முன்னிலை​யில் பையில் இருந்த பொருட்​கள் சரி​பார்க்​கப்​பட்​டன. பின்​னர், முறைப்​படி நுங்​கம்​பாக்​கம் வரு​மான வரித்​துறை அதிகாரி​கள் முன்​னிலை​யில் தங்க ஆபரணங்​கள், பணம் ஆகியவை உரிய​வரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

பையில் பல லட்​சம் மதிப்​புள்ள நகைகளும், பணமும் இருந்​த​போதி​லும், சற்​றும் ஆசைப்​ப​டா​மல் உடனடி​யாக ரயில்வே போலீஸாரிடம் ஒப்​படைத்த கல்​லூரி மாணவர்​களின் நேர்​மையை ரயில்வே காவல்​ கண்​காணிப்​பாளர்​ ராஜன்​ வெகு​வாக பாராட்டினார்​.

SCROLL FOR NEXT