தமிழகம்

“திமுக தோற்க வேண்டும் என ராகுல் காந்தி நினைக்கிறார்” - அண்ணாமலை அதிரடி பேச்சு

செய்திப்பிரிவு

“திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு முறையாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. தமிழகத்தில் திமுக தோற்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார்” என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமை ஆதரித்து அண்ணாமலை ஆவாரம்பாளையம் பகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இத்தொகுதியின் தேர்தல் களத்தை பார்க்கும்போது, களத்தில் கே.ஆர்.ஜெயராம் என்ற ஒரே ஒரு வேட்பாளர் தான் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் தற்போது தான் களத்திற்கு வந்துள்ளார். அவர் கடந்த முறை மநீம சார்பில், உடுமலையில் போட்டியிட்டார்.

          

அப்போது, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக-வுக்கு எதிராக டிவி-யை எல்லாம் உடைத்தார். பின்னர் அவரது கட்சியே இல்லாமல் போய், இறுதியாக திமுக-வில் இணைந்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் முடிவு என்ன என்பது தெரியும் என்பதால், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமிழகத்துக்கு பிரச்சாரத்துக்கு வருவதற்கு தயாராக இல்லை.

மே 4-ம் தேதிக்கு பிறகு பழனிசாமி முதல்வராக ஆவார். ராகுல் காந்தி எங்காவது வரவேண்டும் என்றால் கடல் இருக்க வேண்டும் அல்லது குளம் இருக்க வேண்டும். கடல் இருந்தால் அதனை தாண்டி வருவார். குளம் இருந்தால் மீன்பிடிக்க வருவார். ஆனால், கோவையில் சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதியில் குளத்தை வெட்டி மீனை விடுவதற்குள் இங்குள்ள நம் வேட்பாளர்கள் வெற்றி பெற்று விடுவார்கள். தமிழகத்திற்கு ஆகாத கட்சி காங்கிரஸ். வரக்கூடாத கட்சி திமுக. இந்த இரண்டு கட்சிகளும் ஆமை புகுந்த வீடு மாதிரி.

1965-ல் பொள்ளாச்சியில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக, காங்கிரஸுக்கு எதிராக நடத்தியது. அதன் பின்னர் காங்கிரஸ் உடனேயே திமுக கூட்டணி வைத்தது. தமிழகத்திற்கு ஒவ்வொரு பிரச்சினை வரும்போதும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சியும் மாநிலத்தில் திமுக ஆட்சியும் தான் இருந்தது. இவற்றையெல்லாம் பார்த்துத்தான் வாக்காளர்கள், மத்தியில் காங்கிரஸ் கட்சி வேண்டாம் என்று முடிவுக்கு வந்துள்ளனர். திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு குற்றங்கள் அரங்கேறி உள்ளன. முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டுவதற்காக மட்டும் தான் இங்கு வருகிறார். ஆனால், திட்டங்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் தான் தொடங்கப்படுகிறது.

திமுக-வை ஒரு இடத்திலும் கூட வர விடக்கூடாது. திமுக ஆட்சிக்கு வந்தால் திருடன் கையில் சாவி கொடுத்தது போல் ஆகும். அதிமுக - பாஜக குறித்து கனிமொழி பேசுகிறார்.

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுக்கும் போது, காங்கிரஸ் உடன் தான் திமுக இருந்தது. அதனால் தான் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கின்றனர். பல்வேறு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் பொறுப்பு திமுக - காங்கிரஸ் தான். திமுக கூட்டணியில் கூட்டணி கட்சியினர்களுக்கே முறையாக தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. தமிழகத்தில் திமுக தோற்க வேண்டும் என்று ராகுல் காந்தி நினைக்கிறார். ராகுல் காந்தி கோவை வேட்பாளர்களை கூட ஆதரித்துப் பேசவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT