சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று சென்னை வருகிறார். தீவுத்திடலில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ‘மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்று, கல்லூரி மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாட உள்ளார்.
நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியதாவது:
இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, மொழி, கலாச்சாரம், பெண் கல்வி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ராகுல் காந்தி மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும், விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு செய்து க்யூஆர் குறியீடு வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பெற்றோர்களுக்கு அனுமதி இல்லை.
பணப்பட்டுவாடா, கறி விருந்து, பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை இல்லாமல் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. பணம் செலவழிக்காமல் சாமானியர்களும் தேர்தலில் போட்டியிடும் சூழல் உருவாக வேண்டும். திமுகவின் வாக்குகள் குறைந்துள்ளன. அதிமுக அமித் ஷா கட்டுப்பாட்டில் இருப்பதால் மக்கள் ஏற்கவில்லை. விஜய் தலைமையிலான அரசுக்கும், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணிக்குமான வெற்றி இது. விஜய் தலைமையிலான ஆட்சிக்கு மக்கள் அளித்த ஆதரவாகவே இந்த வெற்றியை பார்க்கிறோம். ஊழல், லஞ்சம் இல்லாத நிர்வாகம் குறித்த மக்களின் எதிர்பார்ப்பும் இந்த முடிவில் வெளிப்படு கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை வரும் ராகுல், முதல்வர் விஜய்யை சந்தித்து, சமகால அரசியல் குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே நாளை நடைபெறும் நிகழ்வுகளில் பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின்போது காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜேஷ்குமார், பெ.விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா, மாநில பொதுச் செயலாளர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.