‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்ற கோஷங்களுக்கு மத்தியில், 71 மாவட்ட காங்கிரஸ் தலைவர்களை அட்டகாசமாக அறிவித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. ஆனால், இந்த பட்டியலைப் பார்த்துவிட்டு காங்கிரஸார் பலரும் வெந்து நொந்து கிடக்கிறார்கள். காரணம், மாவட்டத் தலைவர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் தலைமை கொடுத்த பில்டப் அப்படி.
கோட்டா சிஸ்டத்தில் மாவட்டத் தலைவர்களை டெல்லியில் உட்கார்ந்து கொண்டு நியமிக்கும் வழக்கத்தை ஒழிக்க நினைத்த ராகுல் காந்தி, இதற்காக அனைத்து மாநிலங்களிலும் கட்சியின் உண்மையான விசுவாசிகளையும் உழைப்பாளிகளையும் மாவட்டத் தலைவர்களாக கொண்டுவர முடிவெடுத்தார். அதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் சிறப்புப் பார்வையாளர்களை அனுப்பி வைத்தார்.
அப்படி தமிழகத்துக்கும் மாவட்டத் தலைவர்களை தேர்வு செய்ய வெளி மாநிலங்களைச் சேர்ந்த 35 பேர் வந்திறங்கினார்கள். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் சுமார் ஒருவார காலம் தங்கி இருந்து தகுதியான மாவட்டத் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களின் செயல்பாடுகள் குறித்து ஒன் டு ஒன் நேர்காணல் நடத்தி 6 பேர் கொண்ட பட்டியலை தலைமைக்கு சமர்ப்பித்தார்கள்.
இம்முறை எப்படியும் மாவட்டத் தலைவர் தேர்வு நியாயமாக நடக்கும் போலிருக்கிறது என்று நம்பி, தகுதிபடைத்த பலரும் தங்களது செயல்பாடுகள் குறித்த கோப்புகளுடன் நேர்காணலில் ஆர்வத்துடன் பங்கெடுத்தனர். ஆனால், ராகுல் காந்தி என்ன நினைத்தாரோ அதற்கு நேர்மாறாக காங்கிரஸ் வழக்கப்படியே ‘கோட்டா’ சிஸ்டத்தில் பலரும் இப்போது மாவட்டத் தலைவர் பதவியைக் கைப்பற்றி இருப்பதாக நம்பிக்கையோடு காத்திருந்த பலரும் புலம்புகிறார்கள்.
இது தொடர்பாக அவர்களில் சிலர் நம்மிடம் பேசுகையில், “காலங்காலமாக காங்கிரஸுக்காக உழைத்துத் தேய்ந்துவிட்ட எங்களைப் போன்றவர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஒன்றுக்கு இரண்டு முறை தமாகா-வுக்குப் போய்விட்டு வந்தவர்களை எல்லாம் இப்போது மாவட்டத் தலைவர்களாக்கி இருக்கிறார்கள். அதற்குக் காரணம், வழக்கமான கோட்டா சிஸ்டம்.
தென்காசி மாவட்ட தலைவராக வந்திருக்கும் ஆலங்குளம் செல்வக்குமார் பீட்டர் அல்போன்ஸின் விசுவாசி. மூப்பனார் பின்னாலும் பிறகு வாசன் பின்னாலும் தமாகா-வுக்கு போய் வந்தவர். ராமநாதபுரம் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜாராம் பாண்டியன், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவரும் முன்னாள் காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு தலைவருமான கே.ஆர்.ராமசாமியின் சிபாரிசில் வந்திருக்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில், தனக்கு இணக்கமாக இல்லை என்பதால் தான் சத்தியமூர்த்தி என்பவரை இரண்டரை வருடங்களுக்கு முன்பு மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு சஞ்சய் கணபதி என்பவரை தலைவராக கொண்டு வந்தார் ப.சிதம்பரம். தற்போது சஞ்சையே மீண்டும் தலைவராகி இருக்கிறார். புதுக்கோட்டை மாவட்டத்தை சிதம்பரமும் திருநாவுக்கரசரும் பிரித்துக் கொண்டிருக் கிறார்கள். புதுகை தெற்கு மாவட்டத்துக்கு தனது விசுவாசியான மணிகண்டனை மாவட்டத் தலைவராக்கி இருக்கிறார் சிதம்பரம்.
அறந்தாங்கி தொகுதியை உள்ளடக்கிய வடக்கு மாவட்டத்துக்கு பெனட்டையும், திருச்சி மாநகர் மாவட்டத்துக்கு ரெக்ஸையும் தலைவராக்கி இருக்கிறார் திருநாவுக்கரசர். பல மாவட்டங்களிலும் இதேதான் நிலைமை. இதெல்லாமே உடனடியாக வெளி வந்திருக்கும் சமாச்சாரங்கள். இன்னும் ரெண்டொரு நாள் போனால் ஒட்டுமொத்த லிஸ்ட்டிலும் யார் யாருக்கு எவ்வளவு கோட்டா என்ற விஷயம் வெட்ட வெளிச்சமாகும்” என்று அழமாட்டாத குறையாக சொன்னார்கள்.