தமிழகம்

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் பிரதமர் மோடி அரசு இந்த முறை தப்பிக்க முடியாது: ராகுல் பேட்டி

செய்திப்பிரிவு

சென்னை: மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் மோடி அரசு இந்த முறை தப்பிக்க முடியாது என டெல்லி திரும்பும் முன் விமான நிலையத்தில் பேட்டியளித்த ராகுல் காந்தி கூறினார்.

சென்னையில் ராகுல் பங்கேற்ற கூட்டத்தில் மாணவர்கள் பலர் பேசினர். வியாசை தோழர்கள்' அமைப்பைச் சேர்ந்த ரஷியா பானு பேசுகையில், "வியாசர்பாடியில், ‘வியாசை தோழர்கள்' அமைப்பு சார்பில் ‘டாக்டர் அம்பேத்கர் ரேஷனல் சென்டர்' என்ற பெயரில் இலவசக் கல்வி மையம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது.

இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த நான், குடும்பச் சூழல் மற்றும் சமூகக் கட்டமைப்புகளின் தடைகளைத் தாண்டி இந்தக் கல்வி மையம் மூலம் அரசியல், பகுத்தறிவு மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆகியவற்றைக் கற்றுத் தெளிவு பெற்றேன். தன் தாயின் முடிவை ஆரம்பத்தில் எதிர்த்த தான், இப்போது பகுத்தறிவுச் சிந்தனையால் அதனைப் புரிந்து கொண்டேன். எனவே நீங்கள் வியாசர்பாடி பகுதிக்கு வந்து மாணவர்களுடன் நேரம் செலவிட்டு உணவு அருந்திச் செல்ல வேண்டும்" என்றார். அதற்கு ராகுல், "நிச்சயம் வருகிறேன்" என உறுதியளித்தார்.

பிறகு நீட் தேர்வை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த அனிதாவின் உடன்பிறந்த அண்ணன் மணிரத்தினம் பேசுகையில், "தாயை சிறு வயதிலேயே இழந்த அனிதா, 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்விக்குத் தகுதி பெற்றார். கிராமப்புற மாணவர்களுக்குப் பரிச்சயமில்லாத நீட் தேர்வை மத்திய பாஜக அரசு திணித்தது. இதனால் மருத்துவக் கனவு சிதைந்த நிலையில், அனிதா நீதிமன்றம் வரை சென்று போராடியும் நீதி கிடைக்கவில்லை. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்

தப்பிக்க முடியாது: டெல்லி செல்லும் முன்பு, சென்னை விமான நிலையத்தில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லி யில் போராடும் இளைஞர்கள் மீது பாஜக அரசு தாக்குதல் நடத்துகிறது. நமது இளைஞர்கள் மீது நரேந்திர மோடி அரசு தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்திய ஜனநாயகமே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. மாணவர் களைத் தாக்கியவர்கள் இந்த முறை தப்பித்துவிட முடியாது. என்ன செய்தாலும் நரேந்திர மோடி தப்பிக்கவே முடியாது” என்றார்.

SCROLL FOR NEXT