சென்னை: ‘ஜெம் கிரானைட் வீரமணிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என முன்னாள் திமுக அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ஜெம் கிரானைட் வீரமணிக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. 2025 அக்.6-ம் தேதி ஒரு தன்னார்வலர் வீடியோ பதிவுடன் புகார் அளித்தார். 7-ம் தேதியே எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, அந்த வீடியோ காட்சியில் தெளிவான முகம் கிடைக்கவில்லை. ஆனாலும், நீதிமன்றத்திலே நாங்கள் வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்கிறோம் என்றோ, டிராப் செய்கிறோம் என்றோ சொல்லவில்லை. ‘
ஆதாரங்கள் கிடைக்கும் வரை பொறுத்திருக்கிறோம்; ஆதாரங்கள் கிடைத்த பிறகு வழக்கு தொடரப்படும்’ என்றுதான் கூறியுள்ளோமே தவிர, நாங்கள் எந்த வழக்கையும் வாபஸ் பெறவில்லை; கைவிடவில்லை.
புதிய ஆதாரங்கள், சாட்சிகள் கிடைக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் குறிப்பாணையைப் போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது எங்களுடைய காவல் துறை.
அப்படி இருக்கும்போது எப்படி நாங்கள் குற்றவாளியாக முடியும்? அவரைப் காப்பாற்ற நாங்கள் நினைக்கவில்லை. ஆக.29-ம் தேதி நீதிமன்றத்தில் இருந்து இவர்களுக்கு ஒரு புகார் வருகிறது. செப்.21-ம் தேதி வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
25 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, அதன்பிறகுதான் இதெல்லாம் பேசுகிறார்கள். போக்சோ வழக்கில் எந்தத் தகவலையும் வெளியே கசியவிடக்கூடாது. ஆனால் அமைச்சர்கள் செய்திகளை கசியவிடுகின்றனர்.
இவ்வாறு செய்திகள் கசிந்து வந்தாலே குற்றவாளி தப்புவதற்கு உதவியாக இருக்கும். எனவே தகவல்களைக் கசிய விடுவது குறித்து சென்னை மாநகர ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேலத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களை வன்கொடுமை செய்து ஆபாச வீடியோ எடுத்த தவெக நிர்வாகி மணிகண்டனை மட்டும் கைது செய்துவிட்டு, மேற்கொண்டு அதில் யார் யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என விசாரிக்காமல் வழக்கை மூடி மறைத்து யாரையோ காப்பாற்ற முயற்சிக்கிறது அரசு.
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீது 2013-ல் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே புகார் கொடுக்கப்பட்டது. அதை மறைத்துவிட்டு 2025-ல் மட்டும்தான் புகார் கொடுத்தது போல் சொல்கின்றனர்.
எதுவாக இருந்தாலும் உண்மையைச் சொல்லுங்கள். வைகுண்டம் எம்எல்ஏ சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தையே ஏமாற்றியிருக்கிறது அரசு. வீரமணி எல்லாருக்கும் அறிமுகமானவர்தான். தவெகவுக்கு இன்னும் அறிமுகமானவர்.
தவெகவில் இருக்கிற பலருக்கு அவர் ரொம்ப நெருங்கிய சொந்தக்காரர் கூட. அதிமுகவுக்கும் சொந்தக்காரர்தான். எல்லாருக்கும் தெரிந்தவர்தான். அதேநேரம், நாங்கள் அவரை எந்த விதத்திலும் ஆதரிக்கவில்லை. இதில் அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.