சென்னை: அரசியலமைப்பு சட்டத்தை மீறி, அரசுக்கு தொடர்பில்லாத நபர்களை அரசு கூட்டத்தில் அனுமதித்ததாக முதல்வர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டிஜிபியிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று புகார் மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது: முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி ரகசியகாப்பு பிரமாணம் எடுத்துக் கொண்டவர்.
அமைச்சரவை கூட்ட விவாதங்கள் மற்றும் அரசின் முக்கிய கொள்கை முடிவுகளை ரகசியமாக பாதுகாக்க வேண்டியது அவரது கடமை.
ஆனால், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இரு தனி நபர்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் அமைச்சரவை கூட்டங்கள், உயர்மட்ட அரசு ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகளில் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர்.
மேலும், அரசு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு பிறப்பிப்பது, கொள்கை முடிவுகளில் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு தலைமைச் செயலக வளாகத்துக்குள் முதல்வரின் அறைக்கு அருகிலேயே தனி அலுவலக அறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் அரசு ஊழியர்களோ தமிழக அரசின் அலுவல் விதிகளின்படி அங்கீகரிக்கப்பட்டவர்களோ அல்ல. அப்படியிருக்கும்போது ரகசிய அரசு கோப்புகளையோ, அமைச்சரவை ஆவணங்களையோ பார்வையிட இவர்களுக்கு அனுமதி வழங்கியிருப்பது அரசு ரகசிய காப்பு சட்டத்தை மீறுவதாகும்.
எனவே, இந்த விவகாரத்தில் பொது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் உடனடியாக முதல்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.
தலைமைச் செயலகத்தின் வருகைப்பதிவேடுகள், சிசிடிவி காட்சிகள் மற்றும் கோப்பு நகர்வு பதிவேடுகளை ஆதாரங்களாகக் கொண்டு, முதல்வர் விஜய் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.