

பைக் சாகசத்தில் ஈடுபட்டவாறு இரும்பு சாலை தடுப்பை இழுத்துச் சென்ற இளைஞர்கள்.
சென்னை: பைக் சாகசத்தில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட. 5 பேர் போலீஸாரிடம் பிடிபட்டனர். சென்னை, பெசன்ட் நகர் பகுதியில் கடந்த 27-ம் தேதி இரவு, பைக்குகளில் சென்ற இளைஞர்கள் சிலர் அதிவேகமாக வாகனங்களை இயக்கி சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியாக சென்றவர்கள் அச்சமடைந்தனர்.
அதுமட்டுமின்றி, சாலையில் போக்குவரத்து ஒழுங்குக்காக போலீஸார் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை தீப்பொறி பறக்க பைக்குகளில் இழுத்துச் சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து, அடையாறு போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக, சாகசத்தில் ஈடுபட்ட பைக்குகளின் பதிவு எண்கள், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் அடையாளம் கண்டனர்.
இதில் தொடர்புடையதாக பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவன், 3 கல்லூரி மாணவர்கள் மற்றும் குன்றத்தூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சிவா (19) ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் இரவு போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, அவர்களது பெற்றோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீஸார், எச்சரிக்கை விடுத்ததுடன், மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஆட்டோ ஓட்டுநர் சிவாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் சாகசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் பைக் ஓட்டினால் ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதோடு, ஓட்டிய வாகனத்தின் பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) ரத்து செய்யப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.