சென்னை: தவெகவின் வெற்றியை `ஜென் ஸி' வாக்காளர்களின் எழுச்சியாக சுருக்கிவிட முடியாது என பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் மாநில அமைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘தமிழகத்தில் வெறும் ஆட்சி மாற்றமல்ல; இது சமூக மனப்போக்கின் மாற்றம்’. இந்த வாக்கியத்தை நான் தொடர்ந்து பதிவு செய்து வருவதற்கு காரணம் உண்டு. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை பலரும் பல கோணங்களில் ஆய்வு செய்கிறார்கள்.
சிலர் அரசியல் கணக்குகளை முன்வைக்கிறார்கள். சிலர் அதிர்ச்சியில் காரணங்களைத் தேடுகிறார்கள். என் அரசியல் அனுபவம் இந்தத் தேர்தலை வேறொரு கோணத்தில் பார்க்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை வெறுமனே ‘ஜென் ஸி’ வாக்காளர்களின் எழுச்சியாகச் சுருக்கிவிட முடியாது.
அவர்கள் மாற்றத்தின் குரலை உரக்க ஒலிக்கச் செய்திருக்கலாம். ஆனால் அந்த மாற்றத்தை வாக்குப் பெட்டியில் உறுதிப்படுத்தியவர்கள் பெரும்பாலும் நடுத்தர வயதினரும் குடும்பப் பொறுப்பைச் சுமக்கும் நடுத்தர வர்க்கத்தினரும்தான்.
பொதுவாக பொருளாதார நெருக்கடியில் வாழும் குடும்பங்கள், பணம், இலவசத் திட்டங்கள் அல்லது உடனடி சலுகைகளை நோக்கி நகரும் என்ற அரசியல் கணிப்பு இம்முறை உடைந்தது.
“வீட்டிலுள்ள இளைஞர்களின் வற்புறுத்தலால் பெற்றோர் வாக்களித்தார்கள்” என்ற விளக்கமும் முழுமையாக ஏற்கத் தக்கதல்ல. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் ஜனநாயக உரிமையை, குடும்பப் பொறுப்பை உணரும் வாக்காளர்கள் எளிதில் பிறர் விருப்பத்துக்கு ஒப்படைப்பதில்லை.
எனவே, இந்த வெற்றியின் அடிப்படை சாதி, மதம், இலவசம், பணம் ஆகியவற்றைத் தாண்டி, கடந்த கால அரசியல் அனுபவங்களில் இருந்து தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள தமிழ்ச் சமூகத்தின் நடுத்தர வர்க்கம் எடுத்த உறுதியான முடிவாக நான் பார்க்கிறேன்.
இந்த வெற்றியில் விஜய்யும், விசிலும் நம்பிக்கையின் அடையாளங்களாக இருந்திருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கையை வெற்றியாக மாற்றியது சமூக மனநிலையின் மாற்றம்தான். இனி அந்த நம்பிக்கையை நிலைநிறுத்துவது செயல்பாடே. அதற்கான இறுதித்தீர்ப்பை வழங்குவது காலம் மட்டுமே. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.