வி.எஸ்.கார்த்தி (இடது), சுந்தர்.சி (வலது)
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் திட்டத்துடன் தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக களப்பணியாற்றி வந்த புதிய நீதிக்கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வி.எஸ்.கார்த்தி, இத்தொகுதியின் வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி அறிவிக்கப்பட்டதால் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக சார்பில் தலா ஒரு தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் வேட்பாளராக இயக்குநர் சுந்தர் சி-யை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.
சுந்தர்.சி அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு மதுரை மத்திய தொகுதிக்கு வேட்பாளர் சுந்தர்.சி-யும், கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் இன்று வந்தனர். இந்நிலையில் புதிய நீதிக் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் வி.எஸ்.கார்த்தி கட்சியிலிருந்து வெளியேறி ஏ.சி.சண்முகத்துக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
வழக்கறிஞர் வி.எஸ்.கார்த்தி மதுரையைச் சேர்ந்தவர். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சமூகத்தை சேர்ந்தவர். அவர் மதுரை மத்திய தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில் அந்த தொகுதியில் போட்டியிட முடிவு செய்து கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.சமீபத்தில் மதுரை சுற்றுச்சாலையில் 150 அடி உயர வ.உ.சி சிலை அமைக்க குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அழைத்து வந்து அடிக்கல் நாட்டு விழா நடத்தினார். அந்த விழாவில் இயக்குநர் சுந்தர் சி-யும் பங்கேற்றார்.
அதிமுக - பாஜக கூட்டணியில் மதுரை மத்திய தொகுதி கிடைத்ததும் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவோம் என நினைத்திருந்த நிலையில் சென்னையை சேர்ந்த இயக்குநர் சுந்தர் சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அதிருப்தியடைந்து கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். இவரை தொடர்ந்து இவரது ஆதரவாளர்கள் பலரும் கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
இது குறித்து கட்சியினர் கூறுகையில், “வ.உ.சி சிலை அடிக்கல் நாட்டு விழாவுக்கு பிறகு மதுரைக்கு பிரதமர் மோடியை ஏ.சி.சண்முகத்துடன் சென்று வழக்கறிஞர் கார்த்தியும் நேரில் சந்தித்துள்ளார். அப்போது அவரை மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் என பிரதமரிடம் ஏ.சி.சண்முகம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இவர் பெயர் தான் வேட்பாளர் பட்டியலில் முதலில் இருந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக்கு பதிலாக சுந்தர்.சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து கார்த்திக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிருப்திடைந்துள்ளனர்” என்றனர்.