சென்னை: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற அமைப்பின் தலைவராக புஷ்பவனம் குப்புசாமியை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தின் தலைவராக நடிகர் வாகை சந்திரசேகர் பொறுப்பு வகித்துவந்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமியை தலைவராக நியமித்து தமிழக அரசு நியமித்துள்ளது.
பிரபல நாட்டுப்புறக் கலைஞர் மற்றும் இசைக் கலைஞரான புஷ்பவனம் குப்புசாமி, நாட்டுப்புறக் கலைகளின் வளர்ச்சிக்காகப் பல ஆண்டுகளாகப் பங்களித்து வருகிறார். தமிழ் பாரம்பரிய நாட்டுப்புறக் கலையான நாட்டுப்புறப் பாடல் கலையை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். கலைத் துறையில் இவருடைய பங்களிப்பைப் பாராட்டி தமிழக அரசு ஏற்கெனவே இவருக்கு கலைமாமணி விருது வழங்கி யுள்ளது.
இதுகுறித்து புஷ்பவனம் குப்புசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவராக என்னை நியமித்த தமிழக அரசுக்கும், முதல்வர் விஜய்க்கும் எனது மனமார்ந்த நன்றி. கிராமிய கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன். இயல், இசை, நாடகம் என எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு கரம் கொடுத்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள் வோம்’’என்றார்.