ரூ. 27 ஆயிரத்துக்கு விலை போன புலசா மீன்.
புதுச்சேரி: ஆந்திரம் மற்றும் தெலங்கானா மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது புலசா மீன். இந்த ஒரு மீனின் விலை ரூ.27 ஆயிரத்துக்கு விலை போனது.
‘மீன்களின் ராஜா’ என்று அழைக்கப்படும் இந்த மீன், தனிச்சுவை உடையது. மருத்துவ குணம் உடையது. மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்புக்கு சிறந்தது என்று நம்பப்படுகிறது. இந்த மீன் பிடிபடும் போதெல்லாம் அதிக விலைக்கு விற்கப்படும்.
புதுச்சேரி யூனியன் பிரதேசம், ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் கிடைத்த 1,300 கிராம் எடையிலான ஒரு புலசா மீன் நேற்று ரூ.27 ஆயிரத்துக்கு விலை போனது. ஏனாம் மீன் அங்காடியில் நடந்த ஏலத்தில் ரூ.26 ஆயிரத்துக்கு காக்கிநாடா கோட்டிபள்ளியைச் சேர்ந்த மீனவர் மல்லாடி சத்யநாராயணா ஏலம் எடுத்தார்.
இதை ஆயிரம் ரூபாய் லாபமாக வைத்து ரூ. 27 ஆயிரத்துக்கு அடுத்த சில நிமிடங்களில் விற்றார். கடந்த 10 நாட்களில் கோதாவரியில் சுமார் 7 புலசா மீன்கள் கிடைத்தன. அவை ரூ.14 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை விலை போனது. நேற்று கிடைத்த மீன் ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்த ஆண்டின் அதிகபட்ச விலை என விற்பனையாளர்கள் தரப்பில் குறிப்பிட்டனர்.