உடுமலையில் பொரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்.

 
தமிழகம்

மூலப்பொருட்களின் விலை உயர்வால் உடுமலையில் நலிவடைந்து வரும் பொரி உற்பத்தி தொழில்

எம்.நாகராஜன்

உடுமலை: மூலப்​பொருட்​களின் விலை உயர்வால் உடுமலையில் பொரி உற்பத்தி தொழில் நலிவடைந்து வருவதாக உற்பத்​தி​யாளர்கள் கவலை தெரிவித்​துள்​ளனர்.

உடுமலையை அடுத்த ஏரிப்​பாளையம், குமரலிங்கம், கொழுமம், பாப்பான்​குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்​களில் பொரி தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.

பொரி தயாரிப்​பிற்கான சிறப்​பம்​சங்கள் கொண்ட அரிசி, கொல்கத்தா மற்றும் கர்நாடக மாநிலங்​களில் இருந்து டன் கணக்கில் கொள்முதல் செய்யப்​படு​கிறது.

இந்த அரிசியை நீரில் ஊறவைத்து, வெயிலில் காயவைத்து சிறு குவியல்களாக குவிக்​கின்​றனர். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு, சர்க்கரை, சமையல் சோடா மற்றும் ஆற்று மணல் சேர்த்து சில மணி நேரம் பக்கு​வப்​படுத்​துகின்​றனர்.

பக்கு​வப்​படுத்​தப்பட்ட அரிசியை அடுப்பில் வைத்து இரண்டு மணி நேரத்​திற்கும் மேலாக பதமாக வேகவைக்கும் போது மொறுமொறுப்பான, சுவையான பொரி தயார் செய்யப்​படு​கிறது.

நடப்பாண்டு மூலப்​பொருட்​களின் விலை உயர்வு உற்பத்​தி​யாளர்​களைப் பாதித்​துள்ளது. கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.55-க்கு விற்கப்பட்ட பொரி அரிசி, தற்போது பல்வேறு காரணங்​களால் விலை உயர்ந்து ரூ.75-க்கு விற்பனை​யாகிறது.

தயாரான பொரிகள் மூட்டைகளில் அடைக்​கப்​பட்டு கோவை, திருப்​பூர், மதுரை, பொள்ளாச்சி, திண்டுக்கல் மற்றும் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதி​களுக்கு மொத்த வியாபாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்​படு​கின்றன.

இது குறித்து உற்பத்​தி​யாளர் பூங்கொடி செந்தில்​குமார் கூறும்​போது, ‘‘பொரியைப் படி மற்றும் பக்கா கணக்கில் விற்பனை செய்கி​றோம். மூலப்​பொருட்கள் விலை உயர்வால் 55 பக்கா எடையுள்ள ஒரு பொரி மூட்டை தற்போது ரூ.570-க்கு விற்பனை​யாகிறது.

சமீபகாலமாக அயல்நாட்டுச் சிற்றுண்​டி​களின் வரத்து அதிகரித்​துள்​ளதால் பாரம்​பரியப் பொரியின் விற்பனை கணிசமாகக் குறைந்​துள்ளது. தற்போது சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகள் வரவுள்ள நிலையில், விற்பனை விறுவிறுப்​படைந்​துள்ளது.

ஆனால், பண்டிகைக்கு பிறகு தொழில் மந்த நிலைக்கு சென்று​விடும். உடுமலை சுற்று​வட்​டாரத்தில் முன்பு 100-க்கும் மேற்பட்ட குடும்​பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வந்தன.

ஆனால், தொழில் நலிவடைந்​ததால் பெரும்​பாலானோர் மாற்று வேலைகளுக்குச் சென்று​விட்​டனர். நலிவடைந்து வரும் பொரி உற்பத்தித் தொழிலை​யும், அதை நம்பி​யுள்ள குடும்​பங்​களின் வாழ்வா​தா​ரத்​தையும் மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்’’ என்றார்.

பொரி உற்பத்​திக்குத் தேவையான நவீன இயந்திரங்களை வாங்கு​வதற்கு அரசு மானியத்​துடன் கூடிய கடன் உதவிகளை வழங்கி, பாரம்​பரியத் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதே பொரி உற்​பத்​தி​யாளர்​களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

SCROLL FOR NEXT