காரைக்கால்: புதுச்சேரியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு எஸ்.டி சான்றிதழ் வழங்குவது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜாதோத்து ஹுசைன் தெரிவித்துள்ளார்.
காரைக்கால் மாவட்டத்துக்கு இன்று (அக்.22) வந்த தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜாதோத்து ஹுசைன், காரைக்கால் அம்பேத்கர் நகரில் வசிக்கும் காட்டுநாயக்கன் இன மக்களையும், நல்லம்பல் பகுதியில் வசிக்கும் மலைக்குறவர் இன மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களில் தொழில், வாழ்விட அமைப்பு, கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாகவும் விரிவாக கேட்டறிந்தார்.
அப்போது மக்கள் தரப்பில், தங்களுக்கு எஸ்.டி சாதிச் சான்றிதழ், உரிய சாதிச் சான்றிதழ் இல்லாததால் உயர் கல்வி கற்றிருந்தும் அரசு வேலை வாய்ப்புகளை பெற முடியாத நிலை, குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லாதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.
பின்னர் ஆணைய உறுப்பினர் ஜாதோத்து ஹுசைன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கக் கூடிய மலைகுறவர், காட்டுநாயக்கன், குறும்பர், இருகுளார் ஆகிய இனங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு பழங்குடியினர்(எஸ்டி) சாதிச் சான்றிதழ் கேட்பது தொடர்பாக உரிய விசாரணை மேற்கொள்ளும் வகையில் புதுச்சேரிக்கு வந்துள்ளேன்.
ஏனம் பகுதியில் ஏற்கனவே இருகுளா மக்களை சந்தித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் காரைக்காலில் காட்டுநாயக்கன் இன மக்களை சந்தித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது பழக்க வழக்கம், கலாச்சாரம், பாரம்பரியம், தொழில் உள்ளிட்ட பழங்குடியினருக்குரிய அம்சங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கை குடியரசுத் தலைவரிடமும், நாடாளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும். அதனடிப்படையில் எஸ்.டி சான்றிதழ் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். காரைக்காலில் இம்மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியான வகையில் இல்லை. அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேசிய பழங்குடியினர் ஆணைய இயக்குநர் கல்யாண் ரெட்டி, புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், காரைக்கால் பொறுப்பு ஆட்சியருமான அ.குலோத்துங்கன், புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அர்ஜூன் ராமகிருஷ்ணன், மாவட்ட துணை ஆட்சியர் செந்தில்நாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.