பேச்சுவார்த்தையில் பங்கேற்ற என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா. படம்: எம்.சாம்ராஜ்

 
தமிழகம்

புதுச்சேரி என்டிஏ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியானது: என்.ஆர்.காங்கிரஸுக்கு 16, பாஜகவுக்கு 14 இடங்கள்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: சட்​டப்​பேரவை தேர்தலை​யொட்டி புதுச்​சேரி என்​டிஏ கூட்​ட​ணி​யில் தொகு​திப் பங்​கீடு முடிந்​துள்​ளது. முதல்​வர் ரங்​க​சாமி​யின் என்​.ஆர்​.​காங்​கிரஸ் கட்​சிக்கு 16 இடங்​களும், பாஜக​வுக்கு 14 இடங்​களும் ஒதுக்​கப்​பட்​டுள்​ளன.

புதுச்​சேரி​யில், பாஜக - என்​.ஆர்​.​காங்கிரஸ் தொகுதி பங்​கீடு பேச்​சு​வார்த்தை காம​ராஜர் சாலை​யில் உள்ள தனி​யார் உணவகத்​தில் நேற்று மாலை நடந்​தது. என்​.ஆர்​.​காங்​கிரஸ் தரப்​பில் அதன் தலை​வ​ரான முதல்​வர் ரங்​கசாமி, அமைச்சர் லட்​சுமி நாராயணன் - பாஜக தரப்​பில் மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வி​யா, மேலிடப் பொறுப்​பாளர் நிர்​மல் குமார் சுரானா ஆகியோர் ஆலோ​சனை நடத்​தினர்.

          

​கூட்​டத்​துக்​குப் பிறகு வெளியே வந்த முதல்​வர் ரங்​க​சாமி, ‘‘எப்​போதும் நாங்​கள் என்​டிஏ கூட்​ட​ணி​யில்தான் இருக்​கிறோம். இந்த தேர்​தலிலும் இதை தொடர்​கிறோம். தற்போது நடந்த பேச்​சு​வார்த்தை சுமுகமாக, திருப்​தி​கர​மாக இருக்​கிறது’’ என்​றார். ‘என்டிஏ கூட்​ட​ணி​யில் விஜய்யின் தவெக சேரு​கிற​தா?’ என்ற கேள்விக்கு “நன்றி வணக்​கம்” என கூறிச் சென்​றார்.

பாஜக மேலிட பொறுப்​பாளர் நிர்​மல் குமார் சுரானா கூறிய​தாவது: புதுச்​சேரி​யில் முதல்​வர் ரங்​க​சாமி​யுடன் பாஜக தேர்​தல் பொறுப்​பாளரான மத்​திய அமைச்​சர் மன்​சுக் மாண்​ட​வியா பேசி​னார். பிரதமர் மோடி வழி​காட்​டு​தல், மேம்​பாட்டு பணி​கள், புதுச்​சேரி முதல்​வர் ரங்​க​சாமி செய்​துள்ள பணி​களை முன்​வைத்து தேர்​தலை சந்​திக்க உள்ளோம்.

புதுச்​சேரி​யில் என்​டிஏ கூட்​டணி இறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. கடந்த 25 ஆண்​டு​களில்செய்ய முடி​யாத திட்​டங்​களை கடந்த 5 ஆண்​டு​களில் எங்​கள்

கூட்​டணி அரசு செய்​திருக்​கிறது என்று மக்​களே பேசுகின்​றனர். என்​ஆர்​காங்​கிரஸ் கடந்த தேர்​தலில் 16 இடங்​களில் போட்​டி​யிட்​டது. பாஜக தரப்​புக்கு ஒதுக்​கப்​பட்ட 14 இடங்​களில் கூட்​டணி கட்​சிகளு​டன் சேர்ந்து போட்​டி​யிட்​டோம். கடந்த தேர்​தலில் இருந்த அதே நடை​முறை இம்​முறை தொடரும்.

எந்த தொகு​தி​யில் யார் போட்​டி​யிடு​வார்​கள் என்​பதை ஓரிரு நாளில் இறுதி செய்வோம். பாஜக​வின் முக்​கிய கூட்​டணி கட்சி என்​.ஆர்​.​காங்​கிரஸ். இதர கட்​சிகளு​டன் பாஜக கூட்​டணிஅமைத்து ஒருங்​கிணைத்து போட்​டி​யிடு​கிறது. லட்​சிய ஜனநாயக கட்​சி​யும் எங்​கள் கூட்​ட​ணிக்கு வரு​கிறது. கூட்​ட​ணி​யில் லட்​சிய ஜனநாயக கட்சி வருவதற்கு முதல்​வர் எதிர்ப்பு எது​வும் தெரிவிக்​க​வில்​லை.

அதி​முக​வுக்கு எத்​தனை தொகு​தி​கள் என்​பதை இன்​னும் பேச​வில்​லை. கடந்த முறை அவர்​கள் 4 எம்​எல்​ஏக்​களு​டன் இருந்​த​தால் 5 இடங்​களை ஒதுக்​கினோம். இம்​முறை பேசி முடிவு எடுப்​போம். அதி​முக மற்​றும் லஜக​வுக்கு பாஜக வசம் இருந்து இடங்​களை ஒதுக்​கு​வோம்.

தவெக​வுடன் பேச்​சு​வார்த்தை ஏதும் நடக்​க​வில்​லை. கூட்​ட​ணி​யில் உள்ள பாமக கடந்த முறை புதுச்​சேரி​யில் தொகுதி கேட்​க​வில்​லை. இம்​முறை​யும் இது​வரை ஏதும் கேட்​க​வில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT