தமிழகம்

புதுச்சேரிக்கு கூடுதலாக 50 மெகாவாட் மின்சாரம் வழங்க மத்திய அமைச்சரிடம் நமச்சிவாயம் கோரிக்கை

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், கூடுதலாக 50 மெகாவாட் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மின்துறை அமைச்சர் மனோகர் லாலிடம், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெல்லியில் அனைத்து மாநிலங்கள் மற்றம் யூனியன் பிரதேசங்களின் மின்துறை அமைச்சர்கள் பங்கேற்ற மாநாடு மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோர் லால் கட்டார் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த மாநாட்டில் புதுச்சேரி உள்துறை மற்றும் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டார். அப்போது, மத்திய மின்துறை அமைச்சரிடம், நமச்சிவாயம் கடிதம் அளித்தார். அந்த கடிதத்தின் விவரம்: புதுச்சேரிக்கு தற்போது மாநிலங்களுக்கு இடையேயான மின் கடத்தல் அமைப்பு மூலம் 540 மெகாவாட் மின்சாரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 2026–27 நிதியாண்டில் மின்தேவை 588 மெகாவாட்டை எட்டியுள்ளது. இதனால் 48 மெகாவாட் கூடுதல் மின்சாரத் தேவை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 2027–28 நிதியாண்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், கூடுதலாக 50 மெகாவாட் மின்சாரம் வழங்க மின்துறை முன்மொழிந்துள்ளது.

மேலும், புதுச்சேரிக்கான மின் ஒதுக்கீட்டை 540 மெகாவாட்டில் இருந்து 620 மெகாவாட் ஆக உயர்த்த ஏற்கெனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மின் கடத்தல் பயன்பாட்டு நிறுவனம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக நாகப்பட்டினத்தில் உள்ள 400/230 கிலோவோல்ட் மின் தொகுப்பு துணை மின் நிலையத்திலிருந்து புதுச்சேரியில் உள்ள நான்கு துணை மின் நிலையங்களுக்கு 230 கிலோவோல்ட் உயர் திறன் மின் கடத்தல் பாதைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவடைந்தால் 2028 ஜனவரி 1 முதல் கூடுதல் மின் கடத்தல் திறன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நிரந்தர கட்டமைப்புப் பணிகள் நிறைவடையும் வரை இடைக்கால ஏற்பாடாக, ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள 540 மெகாவாட்டுடன் கூடுதலாக 50 மெகாவாட் மின்சாரத்தை 1.4.2027 முதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பத்தை மின்துறை, தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு மூலம் கடந்த அக்டோபர் மாதம் மத்திய மின் கடத்தல் பயன்பாட்டு நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளது. கூடுதல் மின் திறனைப் பயன்படுத்துவதற்குத் தேவையான மின்தேக்கி வங்கிகள் அமைக்கும் பணிகளையும் புதுச்சேரி மின்துறை மேற்கொள்ளும் எனக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விண்ணப்பத்தை விரைந்து பரிசீலித்து ஒப்புதல் வழங்கி, 2027 ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதுச்சேரிக்கு கூடுதல் மின்சாரம் கிடைக்க மத்திய அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை, அமைச்சர் நமச்சிவாயம் சந்தித்தார். அப்போது, புதுச்சேரியில் கபடி, தடகளம், ஹாக்கி, கைப்பந்து, பளுதூக்குதல் ஆகிய 5 விளையாட்டுகளுக்கான தேசிய விளையாட்டு சிறப்பு மையம் அமைக்க வேண்டும்.

மேலும், தேசிய விளையாட்டு சிறப்பு மையம் அமைப்பதன் மூலம் புதுச்சேரி இளம் வீரர்களின் திறமைகளை மேம்படுத்தி, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதிக்க வாய்ப்பு ஏற்படும். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்த விளையாட்டு

வீரர்களுக்கு 2004 முதல் 2024-ம் ஆண்டு வரை வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊக்கத்தொகையை வழங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கடந்த முறை அமைச்சராக இருந்தபோது கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை மீண்டும் அமைச்சர் நமச்சிவாயம், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் இந்த சந்திப்பின்போது வலியுறுத்தினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT