புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

 
தமிழகம்

“மனசாட்சி இருந்தால் வைத்திலிங்கம் ராஜினாமா செய்ய வேண்டும்” - புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: “நாராயணசாமி, முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்களை காலி செய்யவே தேர்தலில் எம்.பி வைத்திலிங்கம் செயல்பட்டார். அவருக்கு மனசாட்சி இருந்தால் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்,” என புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி என்.ஆர் காங்கிரஸ் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ”புதுச்சேரி முதல்வர் பணம் வாங்கிக் கொண்டு அமைச்சர் பதவியை எனக்குத் தந்ததாக காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் பேசியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு என் மீது வைத்திலிங்கம் எம்.பி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டினார். அதற்கு நேரடியாக விவாதிக்கத் தயார் என நான் தெரிவித்த பிறகு அவர் வாய் திறக்கவே இல்லை.

மல்லாடி மீது லஞ்சம், ஊழல் குறித்துப் பேச புதுச்சேரி மட்டுமல்ல இந்தியாவிலேயே யாருக்கும் தகுதியில்லை. எனது சொந்தப் பணத்தில் தான் அனைத்தையும் செய்து வருகின்றேன். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தெரிவிக்கக்கூடாது. வெளியில் பலரும் தெரிவிக்கும் தகவலில் உண்மையானதை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும். இது பற்றி எங்கு வேண்டுமானாலும் விவாதிக்க தயாராகவுள்ளேன்.

பணம் வாங்கி அமைச்சர் பதவி கொடுக்கும் பழக்கம் முதல்வர் ரங்கசாமிக்கு இல்லை. பண பேரம் நடந்திருந்தப்பதாக இருந்தால் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு அமைச்சர் பதவி அப்போதே தரப்பட்டிருக்குமே ?

நாராயணசாமியையும், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, கமலக் கண்ணன் உள்ளிட்டோரை காலி செய்யவே கடந்த தேர்தலில் வைத்திலிங்கம் எம்.பி. செயல்பட்டார். வைத்திலிங்கம் முதல்வராக இருந்தபோது நான் அமைச்சராக பணம் கொடுத்தேனா என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.

அதே போல் ஏனாமில் முந்தைய எம்எல்ஏ கொல்லப்பள்ளி சீனிவாசன் அசோக்கை விமர்சித்து வந்த வைத்திலிங்கம், திடீரென்று காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு தந்ததற்கு காரணம் என்னவென்பதை விளக்க வேண்டும். அங்கு சூதாட்டம், குப்பை அள்ளுவது ஆகியவற்றில் ஏற்பட்ட ஊழலில் கிடைத்த பணத்தை பெற்று வாய்ப்பு தந்தாரா என விளக்கம் அளிக்க வேண்டும்.

கடந்த ஏழு ஆண்டுகளாக எம்.பியாக இருந்தும் புதுச்சேரிக்கு எந்த விதமான திட்டங்களையும் கொண்டு வரவில்லை. மனசாட்சி இருந்தால் எம்.பி பதவியையும் வைத்திலிங்கம் ராஜினாமா செய்ய வேண்டும். இதுவரை இருந்த எம்.பிக்களில் திறனற்ற செயல்பாட்டில் உள்ளவர் வைத்திலிங்கம் தான். மத்தியில் பாஜக ஆட்சி இருந்தாலும் புதுச்சேரிக்கு திட்டங்களை கொண்டு வரத் தெரியாதவர் எதற்கு எம்.பியாக இருக்க வேண்டும் ? புதுச்சேரியில் இந்த வாரத்தில் அமைச்சரவை விரிவாக்கம், இலாகா ஒதுக்கீடு உள்ள விஷயங்கள் முடிவுக்கு வந்துவிடும்” என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

SCROLL FOR NEXT