சென்னை: ‘நாட்டின் நிதிநிலைமையைக் காக்கும் காவலர்கள் வருமானவரித் துறையினர்’ என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் தெரிவித்தார். தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல வருமானவரித் துறை சார்பில் 167-வது வருமானவரி தினவிழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது.
இந்த விழாவில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கே.கைலாசநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வருமானவரி அதிகாரிகளுக்கு விருது வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் பாஜ்பாய், வருமான வரி தலைமை இயக்குநர் (புலனாய்வு பிரிவு) அருண் சி.பாரத் உள்ளிட்ட அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பேசியதாவது: கடந்த 166 ஆண்டுகளில் இந்தத் துறை மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது.
காலனித்துவ காலத்தில் வளங்களைச் சுரண்டுவதற்காகத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இன்று சுதந்திர இந்தியாவில் சமூக சமத்துவம் மற்றும் பொருளாதாரத் தன்னிறைவுக்கான இயந்திரமாக உருவெடுத்துள்ளது. 140 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாட்டை வல்லரசாக மாற்ற பெரும் மூலதன முதலீடு தேவை.
வரி வசூலில் சாதனை
நமது உள்நாட்டு வருவாய் வசூல் உலகளாவிய இலக்குகளுக்கு இணையாக இருக்க வேண்டும். 2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் வரலாறு காணாத வகையில் ரூ.23 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
இது மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 56 சதவீதமாகும். இது வரிச் சுமையை உயர்த்திப் பெறாமல், வரி விகிதங்களை குறைத்து, விதிகளை எளிமையாக்கியதன் மூலம் கிடைத்துள்ளது.
நீங்கள் வெறும் வரி வசூல் செய்பவர்கள் அல்ல; நாட்டின் நிதி நிலையைப் பாதுகாக்கும் காவலர்கள். நீங்கள் வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாயும் ஒருஏழைக் குழந்தையின் கல்விக்கோ, நோயாளியின் சிகிச்சைக்கோ அல்லது நாட்டின் மேம்பாட்டுக்கோ பயன்படுகிறது.
இந்தியாவின் வளர்ச்சியில் நீங்கள் அமைதிச் சிற்பி களாக திகழ்கிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமானவரி முதன்மை தலைமை ஆணையர் சுனில் பாஜ்பாய் பேசும்போது, ‘‘கடந்த 2023-24 நிதியாண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம் வரி வசூலில் மிகச்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி உள்ளது.
அதன்படி, ரூ.1,29,200 கோடி வரி வசூல் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இலக்கைத் தாண்டி ரூ.1,41,546 கோடி நிகர வரி வசூல் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 14.2 சதவீத வளர்ச்சியாகும். குறிப்பாக, கார்ப்பரேட் வரி வசூல் 28.83 சதவீதவளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மொத்த வரி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியைத் தாண்டி யுள்ளது’’ என்றார்.