கர்நாடகாவின் மேகேதாட்டு பகுதி
புதுச்சேரி: மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டுமென புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்த அரசு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், திமுக எம்எல்ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், நேயம் மக்கள் கழக தலைவர் நேரு, லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் ஆகியோர் தனிநபர் தீர்மானம் கொண்டுவந்தனர்.
இந்த தீர்மானத்தை அரசு தீர்மானமாக ஏற்றுக்கொண்டு, முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்து பேசியது: “புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு மாறாகவும் தமிழக எல்லை பகுதியை ஒட்டி சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்குள் மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.
அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சட்டப்பேரவை தனது கண்டனத்தைப் பதிவு செய்வதுடன் எதிர்ப்பையும் பதிவு செய்கின்றது.
மேகேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதிரானதாகும்.
புதுச்சேரி உள்ளிட்ட காவிரிப் பாசன மாநிலங்களின் முன் இசைவு பெறாமல் மேகேதாட்டுவில் அணை கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசு இந்த விவகாரத்தில் மேலும் தொடர் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் இருக்க தடை விதிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பேரவை வலியுறுத்துகிறது.
மேலும், காரைக்கால் பகுதி விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட, மேகேதாட்டுவில் கர்நாடக அரசு, அணை ஏதும் கட்டாமல் தடுத்திடவும், உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளைப் பாதுகாத்திடவும், புதுச்சேரி அரசு நிர்வாக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பது என்று இச்சட்டப்பேரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது,” என்றார்.
இதன்பின், எதிர்கட்சித் தலைவர் நாஜிம் (திமுக) பேசும்போது, “இது தமிழகம், புதுச்சேரி இரண்டு மாநிலங்கள் சம்மந்தப்பட்டது. இரண்டு மாநிலங்களும் ஒன்றாக கைகோத்து செயல்பட வேண்டும். நிச்சயம் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் நம்முடைய பங்கினை பெற முடியும். காவிரி பிரச்சினை பல நூற்றாண்டு காலமாக இருக்கிறது.
காவரி நடுவர் மன்றம் அமைத்து தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதை கொண்டு செயல்படுகின்றோம். திமுக, அதிமுக என எந்த ஆட்சி இருந்தாலும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். தொகுதி விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். ஆனால் ஆகஸ்ட் மாதம் வந்தும் இதுவரை தண்ணீர் எங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் அழுத்தம் கொடுக்க வேண்டும்,” என தெரிவித்தார்.
மேலும் திமுக எம்எல்ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், நேயம் மக்கள் கழக தலைவர் நேரு, லஜக தலைவர் ஜோஸ் சார்லஸ் விக்னேஸ்வரன், வையாபுரி கார்த்திகேயன், காங்கிரஸ் கார்த்திகேயன் ஆகியோர், கர்நாடக அரசை கண்டித்தும், மேகேதாட்டுவில் அணை கட்ட முழு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியும் பேசினர்.
இதன்பின், சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன், “கர்நாடகத்தில் யார் ஆட்சியில் இருந்தாலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒற்றுமையாக தமிழகம், புதுச்சேரியை எவ்வாறு வஞ்சிக்கலாம் என்று நிலையில் செல்படுகின்றனர்.
எப்போதும், கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காது. காவிரி பாயும் மாநிலங்களில் அனுமதியை பெற்றுதான் எந்த ஒரு அணையையும் கட்ட வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், அந்த இரண்டு தீர்ப்புகளையும் மதிக்காமல் கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணைக் கட்ட முயற்சித்து வருகிறது. கர்நாடக முதல்வர் தமிழகம் வந்தபோது அணை கட்டினால் தமிழகம், புதுச்சேரிக்கு நல்லது என்கின்றார். அதே முதல்வர் கர்நாடக பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளிக்கும்போது தமிழகத்துக்கு ஒரு வாலி தண்ணீரை கூட தரமாட்டோம் என்கின்றார்.
ஆகவே, இது தொடர்பாக நமது அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். முதல்வர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததை மனதார பாராட்டுவதோடு, இது சம்பந்தமான மேல் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்,” என்றார்.
மேலும், அரசு தீர்மானத்தை பேரவை தற்காலிக தலைவர் சபாநாயகர் அன்பழகன் குரல் வாக்கெடுப்புக்கு அனுமதித்தார். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி கொண்டுவந்த இந்த அரசு தீர்மானம், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.