பெரம்பலூரில் திருமாவளவனை வரவேற்று வைத்த பேனரால் தவெக - விசிகவினர் இடையே சலசலப்பு

பெரம்பலூரில் திருமாவளவனை வரவேற்று வைத்த பேனரால் தவெக - விசிகவினர் இடையே சலசலப்பு
Updated on
1 min read

பெரம்பலூர்: பெரம்பலூரில் திருமண வீடு ஒன்றில், ‘மக்களின் முதல்வரே’ என்று விசிக தலைவர் திருமாவளவனை வரவேற்று வைக்கப்பட்ட பேனரால் தவெக, விசிகவினரிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்தது. தமிழகத்தில் புதிதாக தவெக ஆட்சி அமைத்ததும், திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு, தவெகவுக்கு ஆதரவு வழங்கினார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்.

இதற்கிடையில் ஆட்சியை தங்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் அதிமுக - திமுக கூட்டணி வைத்து, திருமாவளவனுக்கு முதல்வர் பதவி வழங்கப்படுவதாக தகவல் வெளியானது.

ஆனால் இதை அதிமுக, திமுக, விசிக கட்சிகள் பகிரங்கமாகக் கூறவில்லை. அன்று முதல் இன்றுவரை அது வதந்தியாகவே கருதப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பெரம்பலூரில் திருமாவளவனை வரவேற்று வைக்கப்பட்ட பேனரில் ‘மக்களின் முதல்வரே’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பெரம்பலூரை சேர்ந்த விசிக நிர்வாகி வீட்டின் இல்ல திருமண விழாவுக்கு விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர் ராஜ்மோகன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி திருமணம் நடைபெறும் மண்டபம் அமைந்துள்ள சாலையில் தவெக, விசிக கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. மேலும் விசிகவினர் சார்பில் திருமாவளவன், அமைச்சர் ராஜ்மோகனை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

அதில் ஒரு பேனரில் ‘மக்களின் முதல்வரே’ என்று திருமாவளவனை வரவேற்று எழுதப்பட்டிருந்தது. இந்த பேனர் விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்று கூறித்தான், தவெகவுடன் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளார். இந்தநிலையில் ‘மக்களின் முதல்வரே’ என்று பேனர் வைத்திருப்பது, தவெக, விசிக கூட்டணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பெரம்பலூரை சேர்ந்த பெரும்பாலான தவெக தொண்டர்கள், விசிக தலைவர் திருமாவளவன் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பெரம்பலூரில் திருமாவளவனை வரவேற்று வைத்த பேனரால் தவெக - விசிகவினர் இடையே சலசலப்பு
காஞ்சியில் செமிகண்டக்டர் உற்பத்தி பூங்கா, கோவையில் டிஜிட்டல் நிதி மையம்: முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in