புதுச்சேரி: “நாங்கள் ஒருபோதும் சுற்றுலாவுக்கு எதிரி கிடையாது. ஆனால், சுற்றுலாவுக்கு காட்டும் அக்கறையை புதுச்சேரி அரசு சட்டம் - ஒழுங்கில் காட்ட வேண்டும்” என்று திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ராஜ்பவன் தொகுதி திமுக எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மறைந்த தலைவர் ப.கண்ணன் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு சார்பில் அனுசரிக்க வேண்டும். புதுச்சேரியில் எந்தெந்த தலைவர்களுக்கு சிலை இல்லையோ அந்த தலைவர்களுக்கு மேரி கட்டிடத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம் மற்றும் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதேபோல், ப.கண்ணனுக்கும் செய்ய வேண்டும் என்று முதல்வரை சந்தித்து கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
நான் இந்த மனுவை ப.கண்ணனின் மகனாகவோ, எம்எல்ஏவாகவோ கொடுக்கவில்லை. ஒரு தொண்டனாக கொடுத்துள்ளேன். முதல்வரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரி அமைதிப் பூங்காவாக இருந்த காலம் மாறி அச்சுறுத்தலான சூழல் தற்போது நிலவி வருகிறது. அதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. நாங்கள் ஒருபோதும் சுற்றுலாவுக்கு எதிரி கிடையாது. ஆனால், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சுற்றுலாவுக்கு காட்டும் அக்கறையை விட புதுச்சேரியில் அதிகப்படியான அக்கறை காட்டுப்படுகிறது. அதே அக்கறையை புதுச்சேரி அரசு சட்டம் - ஒழுங்கிலும், உள்ளுர் மக்கள் பாதுகாப்பிலும் காட்ட வேண்டும். இன்றை சூழ்நிலையில், புதுச்சேரி மக்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களையும், குழந்தைகளையும் வீட்டைவிட்டு வெளியே அனுப்ப பயப்படுகின்றனர். மக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
பகல் நேரத்திலேயே கொலை நடக்கிறது. விரைவில் சென்டம் (100 சதவீதம்) அடிக்கும் அளவில் கொலைகள் நடக்கிறது. இதனை திமுக எம்எல்ஏ என்ற முறையில் வன்மையாக கண்டிக்கின்றேன். இதற்கு உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்துறை அமைச்சர் சிறப்பு கவனம் செலுத்தி மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
அரசின் சில விஷயங்களை நான் பாராட்டுகிறேன். எதிர்க்கட்சி என்பதால் எல்லாவற்றையும் விமர்சிக்கக் கூடாது. நான் துணைநிலை ஆளுநரை சந்தித்து ராஜ்பவன் தொகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது என்று கூறினேன். அடுத்த நாளே மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரை அனுப்பி இயந்திர மோட்டார் வைத்து தற்காலிக நடவடிக்கை எடுத்து தண்ணீரை வெளியேற்றினர்.
ஆனாலும் இவ்வளவு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் இருந்தும் இன்னும் இயந்திர மோட்டார்களை வைத்து தண்ணீரை இறைக்கும் சூழல் இருக்கிறது என்பதை பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது. இது போதாது. அரசு இன்னும் கவனம் செலுத்தி மழை பெய்தால் ஒரு இடத்திலும் தண்ணீர் நிற்காத மாநிலமாக புதுச்சேரியை மாடல் சிட்டியாக உருவாக்க வேண்டும்.
அடுத்த ஆண்டு மழை பெய்தால் ராஜ்பவன் தொகுதியில் எந்த இடத்திலும் தண்ணீர் நிற்காத வகையில் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி அளிக்கின்றேன்” என்று எம்எல்ஏ விக்னேஷ் கண்ணன் தெரிவித்தார்.