

சென்னை: சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலின் மீது மர்ம நபர்கள் கல் வீசியதில், ரயிலின் உதவி லோகோ பைலட் பலத்த காயமடைந்தார். இது குறித்து, ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மெயில் விரைவு ரயில் நேற்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்டது. இந்த ரயிலை ஈரோடு பிரிவைச் சேர்ந்த லோகோ பைலட் சரவணன் மற்றும் உதவி லோகோ பைலட் விதுன் ஆகியோர் இயக்கினர்.
இந்த ரயில் வியாசார்பாடி ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தின் ஓரத்திலிருந்து மர்ம நபர்கள் சிலர் ரயிலின் மீது திடீரென கற்களை வீசியுள்ளனர். இதில் ரயிலின் எஞ்சின் முன்பக்கக் கண்ணாடி பயங்கர சத்தத்துடன் உடைந்து சிதறியது.
குறிப்பாக, உதவி லோகோ பைலட் அமர்ந்திருந்த பகுதியின் கண்ணாடி முற்றிலும் சேதமடைந்தது. இதில், உதவி லோகோ பைலட் விதுன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது.
உதவி லோகோ பைலட் காயமடைந்த நிலையிலும் இரண்டு லோகோ பைலட்டுகள் சாதுரியமாகச் செயல்பட்டு ரயிலை இயக்கி, இரவு 7.40 மணியளவில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் அவசரமாக நிறுத்தினர். இதனிடையே, கல்வீச்சு தொடர்பாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ரயில்வே அதிகாரிகள் காயமடைந்த உதவி லோகோ பைலட் விதுனை மீட்டு, சிகிச்சைக்காகப் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, மாற்று உதவி லோகோ பைலட் உடனடியாக வரவழைக்கப்பட்டு இன்ஜினில் பொறுப்பேற்றார். அதன்பின்னர், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 8.35 மணியளவில் திருவனந்தபுரம் மெயில் ரயில் பெரம்பூர் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது.
இச்சம்பவம் குறித்து, ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வியாசார்பாடி பகுதியில் ரயில் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஓடும் ரயில் மீது மர்ம நபர்கள் கல் வீசி ஊழியரைக் காயப்படுத்திய சம்பவம் ரயில்வே வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.