படங்கள் எம். சாம்ராஜ்
புதுச்சேரி: தீபாவளி போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி மேட்டுபாளையத்திலிருந்து இயங்கும் புதுச்சேரி அரசு மின்சார பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் மின்சார பேருந்துகள் மத்திய அரசு நிதி உதவியுடன் வாங்கப்பட்டுள்ளன. புதுச்சேரி தாவரவியல் பூங்கா, மேட்டுப்பாளையம் என இந்த பேருந்துகளுக்கு இரு இடங்களில் பணிமனைகள் உள்ளன. மேட்டுப்பாளையத்திலுள்ள பணிமனையில் 25 மின்சார பேருந்துகள் புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தின் கீழ் இயக்கப்படுகின்றன.
இதில் 15 பேருந்துகள் நகரப் பகுதியிலும் 10 பேருந்துகள் வெளிப் பகுதியிலும் இயக்கப்படுகின்றன. இங்கு 65 பேர் பணியில் உள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படும் மின்சார பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறியதாவது: “மேட்டுபாளையம் பேருந்து பணிமனையில் போதிய வசதியில்லை. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு வசதிகள் இல்லை. இதனால் இரவு நேரப் பணிகளின் போதும், பேருந்துகளை நிறுத்தி வைக்கும் போதும் ஓட்டுநர்களுக்கும் வாகனங்களுக்கும் போதிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.
பேருந்துகளைப் பராமரிக்கவும், நீண்ட நேரம் பேருந்தை இயக்கிவிட்டு வரும் ஓட்டுநர்கள் ஓய்வெடுக்கவும் முறையான தங்கும் வகையிலான கட்டட வசதி இல்லை. எனவே, அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பணிமனை கட்டடத்தை கட்ட வேண்டும். மேலும், இங்கிருந்து பேருந்து நிறுத்தம் செல்லவே அரை மணி நேரம் ஆகிவிடுகிறது.
அதற்கு பதிலாக பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள பிஆர்டிசி அலுவலகத்தில் பழுதடைந்து நிற்கும் பேருந்துகளை அகற்றி, மின்சார பேருந்துகளை அங்கேயே நிறுத்த ஏற்பாடு செய்யலாம். மேலும் 75 மின்சார பேருந்துகள் மூன்று மாதங்களில் வரவுள்ளன. அதற்கு இடம் இல்லை. அதற்குள் ஏற்பாடு செய்ய வேண்டும். எங்களுக்கும் தீபாவளி போனஸ் தர வேண்டும். பணிச்சுமையை குறைக்க வேலையை அனைத்து ஓட்டுநர்களுக்கும் சமமாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் பகிர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.