புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, 36.41% வாக்குகள் பதிவாகியுள்ளது.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன்வைத்துத் தலைவர்கள் பிரசாரம் செய்திருந்தனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்தத் தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுவையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர்கள் அனைவரும் பெரும் திரளாக வந்து தங்கள் வாக்குகளை செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் ஜனநாயக நடைமுறையை வலுப்படுத்த கோரிக்கை விடுக்கிறேன். புதுவை எதிர்காலத்தை வடிவமைக்க ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று தமிழ், ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.
டூவீலரில் வந்து வாக்களித்த முதல்வர் ரங்கசாமி: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்திராநகர் திலாசுப்பேட்டை பிள்ளையார் கோயில் வீதியில் வசிக்கிறார். அவர் திலாசுபேட்டையில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வந்தார்.
அவர் வாக்களிக்க சென்ற போலீஸார் புகைப்பட நிருபர்களை உள்ளே அனுமதிக்காதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதிவரை அனுமதிக்காத சூழலில் வாக்களித்து விட்டு வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்க முற்பட்டனர். ஆனால், ‘இங்கு வேண்டாம்’ என்பதுபோல் சைகை செய்துவிட்டு ரங்கசாமி புறப்பட்டார்.
பின்னர் நவசக்தி மாரியம்மன் கோயிலில் அவர் வழிபாடு செய்தார். அதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியிடம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “வாக்களித்தது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்தலுக்கு முதல் நாள் சேலம் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அதேபோல் இம்முறையும் சாமி கும்பிட்டு வந்துதான் வாக்களித்துள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.” என்றார்.
கவனம் ஈர்த்த தனித்துவ வாக்குச்சாவடிகள்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் நிமித்தமாக புதுச்சேரியில் இரண்டும், காரைக்காலில் ஒன்றும் என 3 தனித்துவ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனித்துவ வாக்குச்சாவடிகளில் வாழை மரம், தோரணம், தென்னை ஓலைப் பந்தல் என அழகுப்படுத்தப்பட்டு உள்ளது.
அங்கு வாக்களிக்க வருவோரை பூ கொடுத்து ரோபோ வரவேற்க, பன்னீர் தெளித்து, செம்பருத்தி டீ தந்து வாக்காளர்களை பசுமை பந்தலில் அமர வைத்து அனைவரையும் புதுச்சேரி தனித்துவ வாக்குச்சாவடி கவர்ந்தது.
புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்க வாக்கெடுப்பு நடந்த கீழூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, ராஜ்பவன் தொகுதியில் வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் தந்தை பெரியார் பள்ளி ஆகியவை தனித்துவ வாக்குச்சாவடிகளாக அழகுப்படுத்தப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தனித்துவ வாக்குச்சாவடிகளில் அலங்காரப் பொருள்களும் தொங்கவிடப்பட்டுள்ளன. வாக்களிக்கச் செல்வோரை கவரும் வகையில் பாரம்பரிய பாத்திரங்கள், பழங்கால வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. முழுக்க முழுக்க பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பண்பாட்டு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.
1886-ல் தொடங்கப்பட்ட பாரம்பரிய கட்டுமானம் கொண்ட வஉசி பள்ளி மீண்டும் அதே முறையில் வடிவமைக்கப்பட்ட பிறகு இரண்டாம் முறையாக இந்த வாக்குச்சாவடி தனித்துவ வாக்குச்சாவடியாக அனைவரையும் கவர்ந்துள்ளது.
பரிசு டோக்கனால் சர்ச்சை: துச்சேரி அடுத்த பாகூரில் வாக்காளர்களுக்கு ஒரு தரப்பினர் பரிசு டோக்கன் விநியோகிக்க அதை இன்னொரு தரப்பினர் தடுத்து நிறுத்தியதால், சம்பந்தப்பட்டோர் அதை வீதிகளில் வீசி எறிந்துவிட்டு தப்பி ஓடினர். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.