

தலைமைச் செயலர் சாய்குமார், லஞ்ச ஒழிப்பு டிஜிபி சந்தீப் மிட்டல்
சென்னை: தமிழகத் தலைமைச் செயலர் நா.முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோரை தேர்தல் ஆணையம் திடீரென மாற்றி உள்ளது. புதிய தலைமைச் செயலராக எம்.சாய்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் பதவியேற்றார்.
தமிழகத் தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 15-ம் தேதி வெளியானது. அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக பறக்கும் படைகள், நிலைக் கண்காணிப்புக் குழுக்கள் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தமிழகத்துக்கு 250 கம்பெனி துணை ராணுவப் படையும் ஒதுக்கப்பட்டது. பறக்கும் படையினர் தீவிரமாகக் கண்காணித்து பணம், பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வேட்பு மனுத்தாக்கல் முடிந்து நேற்று முன்தினம் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. ஏப்.23-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள், இதர அதிகாரிகளை மாற்ற இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
வழக்கமாகப் புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் மாற்றம் நடைபெறும். அந்த வகையில் ஏற்கெனவே, விருதுநகர், நாமக்கல், கரூர் உட்பட 8 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டனர். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுத்தது, காவல் துறை போதிய பாதுகாப்பு வழங்காதது குறித்த புகார்கள் தேர்தல் ஆணையத்துக்குச் சென்றன.
இதையடுத்து, கடந்த ஏப்.2-ம் தேதி தமிழகக் காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஜி.வெங்கட ராமன் மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார். தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் மாற்றப்பட்டார். அவருக்குப் பதில் சஞ்சய் குமார், மதுரை காவல் ஆணையராக இருந்த ஜெ.லோகநாதனுக்குப் பதில் அபிஷேக் தீக் ஷித் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மேற்கு மண்டல ஐஜி.யாக இருந்த சரவண சுந்தருக்கு பதில் ரம்யா பாரதி நியமிக்கப்பட்டார். தவிர சேலம் ஆட்சியராக அருண் தம்புராஜ், தூத்துக்குடி ஆட்சியராக விசு மகாஜன் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், தமிழகத் தலைமைச் செயலராக இருந்த நா.முருகானந்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகிய இருவரையும் மாற்றி தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
தலைமைச் செயலர்: நா.முருகானந்தத்துக்குப் பதில், வருவாய் நிர்வாக ஆணையராக உள்ள எம்.சாய்குமாரை புதிய தலைமைச் செயலராக நியமித்துள்ளது. அவர் நேற்று இரவு பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக, தமிழக சைபர் கிரைம் பிரிவு டிஜிபி.யாக இருந்த சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். இவரும் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
சாய்குமார்: தமிழக பிரிவில் 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் எம்.சாய்குமார், பொதுப் பணித்துறை செயலர், மின் வாரியத் தலைவர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவர், செய்தித்தாள் காகித நிறுவனத் தலைவர் போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வராக பழனிசாமி இருந்த போது, முதல்வரின் செயலர்களில் முதன்மையானவராக சாய்குமார் இருந்தார்.
சந்தீப் மிட்டல்: கடந்த 1995-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான சந்தீப் மிட்டல், சைபர் பாதுகாப்பு, குற்றவியல் புலனாய்வில் நிபுணத்துவம் பெற்றவர். தமிழகத்தில் சைபர் குற்றத் தடுப்பு, டிஜிட்டல் விசாரணை, சைபர் ஆளுமை கட்டமைப்புகளை வலுப்படுத்தியதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
திஹார் சிறை பாதுகாப்புத் துறை தலைவர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (டெல்லி) இயக்குநர், தமிழகக் காவல் துறையின்கடலோரப் பாதுகாப்பு குழுமக் கூடுதல் டிஜிபி போன்ற பதவிகளையும் இவர் வகித்துள்ளார்.
ஆணையத்துக்கு ஸ்டாலின் கண்டனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அதிகாரிகளை மாற்றி ஒருதலைப்பட்சமான அத்துமீறிய அரசியல் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம், பாஜகவின் கட்டளைகளை நிறைவேற்றி வருவது வெட்கக்கேடானது.
நாட்டை சர்வாதிகாரப் பாதையில் கொண்டு செல்லத்துடிக்கும் பாஜக ஆட்சியில் ஆதிக்க மனப்பான்மையுடன் பணியாற்றும் தேர்தல் ஆணையம் இதனை உணராமல் இருக்கிறது. இது ஆணையத்தின் கண்ணியத்தைக் கடைத் தெருவில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.
பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு டிஜிபி, தலைமைச் செயலரை மாற்றவில்லை. பிஹார் தேர்தலின் போதும், டிஜிபி, தலைமைச் செயலரை மாற்றவில்லை. தமிழகத்தில் மட்டும் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்தியிருக்கின்றனர். அவர்களை பாஜக தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.
தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டும் தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோரைமாற்ற பாஜக தூண்டிவிடும் காட்டு தர்பார் பிரதிபலிக்கிறது. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன. எத்தனை அதிகாரிகளை மாற்றினாலும் தமிழகத்தில் பாஜக மண்ணைக் கவ்வப் போவது உறுதி. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.