தமிழகம்

புதுச்சேரியில் 38,000 ரேஷன் கார்டுகள் ரத்தா? - அமைச்சர் விளக்கம்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் 38 ஆயிரம் ரேஷன் கார்டுகள் ரத்தானதாக பேரவையில் புகார் எழுந்த நிலையில் எந்த ஒரு ரேஷன் கார்டும் ரத்தாகவில்லை என குடிமைப்பொருள் அமைச்சர் சிவக்கொழுந்து கூறியுள்ளார்.

புதுவை சட்டப்பேரவையில் குடிமைப் பொருள் அமைச்சர் சிவக்கொழுந்து, துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், “குடிமைப் பொருள் துறையால் சுமார் 38 ஆயிரம் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு உண்மையல்ல. துறையால் எந்த ஒரு ரேஷன் அட்டையும் ரத்து செய்யப்படவில்லை.

ரேஷன் அட்டைதாரர் தாமாகவே ஒப்படைக்கக் கோரும்போது, பெயர் நீக்கத்திற்காக விண்ணப்பிக்கும் போது அல்லது அட்டை காலாவதியானது எனக் கண்டறியப்படும் நிலையில் மட்டுமே ரத்து செய்யப்படும்.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ‘பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான மாதாந்திர உணவு தானிய மானியத் தொகை இதுவரை நேரடி மானிய மாற்றம் முறையில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, மத்திய வங்கி மின்னணு நாணயம் வடிவில் மாதாந்திர மானியத் தொகையை பயனாளிகளின் மின்னணுப் பணப்பையில் நேரடியாக வரவு வைக்கும் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தில் 1,65,644 ரேஷன் அட்டைகள் வெற்றிகரமாக திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி முன்னுரிமை குடும்பம் என வகைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்கள் அதற்கான தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்கிறார்களா என்பதை தரவு அடிப்படையில் அரசு சரி பார்த்து வருகிறது.

மத்திய நேரடி வரிகள் வாரியம், மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், நிறுவன விவகார அமைச்சகம், சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஆகியவற்றின் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. இதில் 19,349 குடும்ப அட்டைகள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டு, இறந்த உறுப்பினர் மற்றும் இரட்டைக் குடும்ப அட்டைகள் நீக்கப்பட்ட பிறகு 15,944 அட்டைகள் விரிவான சரிபார்ப்பிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வின் முடிவில் 6,879 குடும்பங்கள் முன்னுரிமை வகைக்கான தகுதியை பூர்த்தி செய்யவில்லை என கண்டறியப்பட்டது.

அதன்படி, புதுச்சேரியில் 6,303, காரைக்காலில் 453, மாஹேயில் 6, ஏனாத்தில் 117 என மொத்தம் 6,879 அட்டைகள் முன்னுரிமை இல்லாத என்ற வகைக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை எந்த குடும்பத்தையும் பொது விநியோகத் திட்டத்திலிருந்து நீக்கும் நடவடிக்கை அல்ல. அவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப அட்டை ரத்து செய்யப்படவில்லை. முன்னுரிமை இல்லாத வகையாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சிவக்கொழுந்து கூறினார்.

SCROLL FOR NEXT