பழநி: பேரிஜம் ஏரி பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதால் கடந்த 15 நாட்களாக சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதற்கிடையே, வனத்துறை அதிகாரிகளின் உறவினர்கள் தடையை மீறிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளது. இதனால் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றே சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும். பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழியில் தொப்பி தூக்கிப் பாறை, மதிகெட்டான் சோலை, வியூ பாய்ண்ட், அமைதி பள்ளத் தாக்கு உள்ளிட்ட இடங்களை பார்வையிட முடியும்.
இந்நிலையில் கடந்த மே16-ம் தேதி காலை முதல் பேரிஜம் ஏரி பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் அங்கு செல்வதற்கு மறு அறிவிப்பு வரும் வரை வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் தடையை மீறி சிலர் பேரிஜம் ஏரிக்கு வனத்துறை வாகனத்தில் சென்று வருவதும், பின்னர் நுழைவு வாயிலில் இருந்து தங்கள் சொந்த வாகனத்தில் ஏறி செல்வதும் போன்ற வீடியோ அண்மையில் வெளியாகி வைரலானது.
சுற்றுலாப் பயணிகளுக்கு தடை உள்ள நிலையில் வனத்துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி தங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் தடையை மீறி பேரிஜம் ஏரிக்குச் செல்ல அனுமதி அளித்ததற்கு பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் என பலரும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயன்ற போது, அழைப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.