தமிழகம்

தீபாவளிக்கு அடுத்த நாள் பொது விடுமுறை

செய்திப்பிரிவு

சென்னை: தீபாவளிக்கு அடுத்த நாளான திங்கள்கிழமை (நவ.9) விடுமுறை வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இது தொடர்பாக பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளும் வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், நவ.9-ம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பொதுத்துறை செயலர் இ.சுந்தரவல்லி வெளியிட்ட அறிவிப்பில், ‘மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி திரும்புவதற்கு வசதியாக, நவ.9-ம் தேதி ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் அரசுக்கு கோரிக்கைகள் வந்தன.

இதை கவனமுடன் பரிசீலித்து நவ.9-ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இதை ஈடுசெய்யும் வகையில் நவ.28-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமையும் (நவ.7) வார விடுமுறை என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதையடுத்து, நவ.6-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சொந்த ஊருக்குப் புறப்படும் வகையில் மக்கள் தயாராகத் தொடங்கியுள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT