சென்னை: ‘தமிழகத்தில் ஆகம விதிகளின்படி நிர்மாணிக்கப்பட்ட கோயில்களைக் கண்டறியும் குழுவின் அறிக்கைகள் குறித்து, பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்’ என்று இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோயில்களைக் கண்டறிய தமிழக அரசால் கடந்த 2022 அக்.6-ம் தேதி 5 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவிடம், அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் மூலமாக கோயில்களின் ஆகம விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அந்த அறிக்கைகளை ஆய்வு செய்த இக்குழு, முதற்கட்டமாக 34,971 கோயில்கள் தொடர்பான விவரங்களைப் பரிசீலனை செய்துள்ளது.
தற்போது இக்கோயில்கள் குறித்த விவரங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.hrce.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவரங்களில் ஏதேனும் விடுபடல்கள் இருந்தாலோ, கருத்துருக்கள் இருந்தாலோ அவற்றை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
அந்த வகையில், இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 30 நாட்களுக்குள், கோயில்கள் குறித்த தங்களது கருத்துகள் மற்றும் கூடுதல் விவரங்களை தபால் மூலம், ‘ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34’ என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும், துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் மக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.