சென்னை: “நீதித்துறை மற்றும் முக்கிய பொது சேவை அமைப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதும் உண்மையான பொதுநல நோக்கம்,” என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 15 கிரவுண்ட் நிலம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு 1990-ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஒரு பகுதியில் மட்டும் மின்சார கட்டணம் வசூலிக்கும் மையம் செயல்படுவதால், காலியாக உள்ள நிலத்தை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் எம்.டி.அருணன் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கறிஞர் அருணன், உயர் நீதிமன்ற வளாகத்தில் இடநெருக்கடி நிலவுகிறது. வாகனங்கள் நிறுத்துவதில் சிக்கல்கள் உள்ளதால், காலியிடத்தை பெற்று, நீதிமன்ற கட்டிடங்கள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், குறிப்பிட்ட அந்த இடத்தில் துணை மின் நிலையம் இயங்கி வருகிறது. கூடுதலாக 5,500 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்க வேண்டியுள்ளது. தற்போதைய துணை மின் நிலையத்தில் இருந்து உயர் நீதிமன்றம், அரசு பொது மருத்துவமனை, துறைமுகம் உள்ளிட்டவற்றுக்கு மின் வினியோகம் வழங்கப்படுகிறது. மின் மாற்றிகளுக்கு இடையில் பாதுகாப்பு கருதி காலியிடம் விட்டு வைப்பது கட்டாயம் என விளக்கமளித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நீதித்துறைக்கு உள் கட்டமைப்பு வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என்பது அவசியம் என்றாலும், இந்த துணை மின் நிலையத்தை மாற்றினால் சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பிற பொது பயன்பாட்டு சேவை அமைப்புகளுக்கான மின் விநியோகம் பாதிக்கப்படும். நீதித்துறை மற்றும் முக்கிய பொது சேவை அமைப்புகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதும் உண்மையான பொதுநல நோக்கம் எனக் கூறி” வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.