சென்னை: வாடிக்கையாளர்களின் அடமான நகைகளை திருடி ஆன்லைன் விளையாட்டு; வங்கி அதிகாரி கைது

வங்கி உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணா

வங்கி உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணா

Updated on
1 min read

சென்னை: வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த ரூ.3 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை திருடி ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த வங்கி உதவி மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அயனாவரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் தினேஷ்குமார். இவர் கடந்த 13-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் புகார் அளித்தார். அதில், ‘வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றிய புரசைவாக்கத்தில் வசிக்கும், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பொட்னூரு முரளி கிருஷ்ணா (34) வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த தங்க நகைகளை திருடிச் சென்று, போலி நகைகளை மாற்றி வைத்துள்ளார்.

இதனால் வங்கிக்கு சுமார் ரூ.3.09 கோடி இழப்பு ஏற்பட்டது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில், அயனாவரம் கிளையில் 21 வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்திருந்த சுமார் 272 பவுன் (2,179 கிராம்) தங்க நகைகளை முரளி கிருஷ்ணா ரகசியமாக எடுத்துச் சென்று, வேறு இடங்களில் அடமானம் வைத்து, அதன் மூலம் கிடைத்த பணத்தை ஆன்லைன் விளையாட்டுகளுக்கும், சொந்த செலவுகளுக்கும் பயன்படுத்தி உள்ளார். அதோடு வாடிக்கையாளர்களின் உண்மையான நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வங்கியில் வைத்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, முரளி கிருஷ்ணா (34) கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், மோசடி செய்யப்பட்ட தங்க நகைகளை மீட்கவும், இந்த மோசடியில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? என்பது குறித்தும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

<div class="paragraphs"><p>வங்கி உதவி மேலாளர் பொட்னூரு முரளி கிருஷ்ணா</p></div>
தஞ்சை: சர்வர் பிரச்சினையால் செயல்படாத இயந்திரங்களை வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்த ரேஷன் கடை பணியாளர்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in