கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் முன்னெச்சரிக்கையாக தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார். | படங்கள்: ஜெ.மனோகரன் |
கோவை: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கோவையில் நேற்று 3-ம் நாளாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி மாநகர் முழுவதும் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தை கண்டித்தும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாணவர் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மாணவர்களின் போராட்ட முன்னெடுப்புகளை கண்காணிக்கும் வகையில் போலீஸார் முன்னெச்சரிக்கையாக குவிக்கப்பட்டிருந்தனர்.
அதேபோல் கொடிசியா மைதானத்தில் 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 15 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவை அரசு கல்லூரி மற்றும் ரேஸ்கோர்ஸ் நடைபாதை உள்ளிட்ட முக்கிய இடங்களிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை காந்திபுரம் டாடாபாத் சாலையில் நேற்று தொடர் முழக்க போராட்டத்தில் பங்கேற்றவர்கள்.
கோவை பூ மார்க்கெட் அருகே ஜீவா இல்லத்தில் நேற்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி மற்றும் நீட் எதிர்ப்பாளர்கள் 3-ம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 50-க்கும் மேற்பட்டோர் நாள் முழுவதும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
பல்வேறு அமைப்பினர் இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். நீட் எதிர்ப்பு இயக்கம் சார்பில் காந்திபுரம் டாடாபாத் சாலையில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
இதில் பங்கேற்றவர்கள், ‘மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும், நீட் தேர்வால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும், டெல்லியில் போராடும் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினர். இப்போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.