பல்லாவரம்: பல்லாவரம் தொகுதியில் சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது எனது முதல் பணி என ஐஜேகே வேட்பாளர் வழக்கறிஞர் வி.வெங்கடேசன் தெரிவித்தார்.
பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதி, அதிமுக கூட்டணியில் ஐஜேகே கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியைச் சார்ந்த வழக்கறிஞர் வி.வெங்கடேசன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். தான் வெற்றி பெற்றால் பல்லாவரம் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்பது குறித்து நம்மிடம் கூறியதாவது:
பல்லாவரம் தொகுதியில் ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. அந்த நீர்நிலைகள் முழுவதும் மாசடைந்து கழிவுநீர் குட்டைகளாக காட்சியளிக்கின்றன. இதனால் நிலத்தடி நீரும், சுற்றுப்புற சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஏரிகளை பாதுகாப்பதன் மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். அப்போது நமக்கு தூய்மையான குடிநீர் கிடைக்கும். பல்லாவரத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால், பலர் தொற்று நோய்களுக்கு ஆளாகினர். இதைத் தடுத்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்லாவரம் முதல் குன்றத்தூர் வரை சாலை விரிவாக்கம் செய்யப்படத்தால் பம்மல், அனகாபுத்தூர் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இச்சாலை நான்கு வழி சாலையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருநீர்மலை ரங்கநாதர் கோயிலில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும் என அறிவித்தும் திமுக அரசு செய்யவில்லை. நாங்கள் வந்தால் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.
அஸ்தினாபுரம் பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தை போக்க துணை மின் நிலையம் கொண்டுவரப்படும். பல்லாவரம் தொகுதி முழுவதும் பாகுபாடு இன்றி சமமான வளர்ச்சி அடைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். புதைவட மின் கம்பி பாதை திட்டம் செயல்படுத்தப்படும், கோயில் நிலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருக்கின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்க சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்.
பல்லாவரம் தொகுதியில் குறிப்பாக சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுவாச தொற்று நோய்களால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை தடுப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பல்லாவரம் தொகுதியில் சுற்றுச்சூழலை பாதுகாத்து, முதன்மை தொகுதியாக மாற்ற முயற்சி மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.