சென்னை: ஊரக வளர்ச்சித் துறையில் 3 இணை இயக்குநர்களுக்கு கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறைச் செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் இணை இயக்குநர் அந்தஸ்தில் மாநிலத் திட்ட மேலாளராக (சமூக ஒருங்கிணைப்பு) பணியாற்றி வரும் மா.சிவக்குமார் பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஊரக வளர்ச்சி, ஊராட்சி இயக்ககத்தில் கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இயக்ககத்தில் இணை இயக்குநராக (திட்டம்) பணிபுரிந்து வரும் கு.செல்வராசு பதவி உயர்வு பெற்று அதே அலுவலகத்தில் கூடுதல் இயக்குநராக பணியமர்த்தப்படுகிறார்.
தமிழ்நாடு சமூகத் தணிக்கை தெற்கு மண்டல இணை இயக்குநராக பணியாற்றி வரும் இரா.மணி பதவி உயர்வு அளிக்கப்பட்டு, இயக்ககத்தில் கூடுதல் இயக்குநராக பணியமர்த்தப்பட்டுள்ளார். பணி நியமனம் வழங்கப்பட்ட அலுவலர்கள் உடனடியாக புதிய பணியில் சேர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.