

சென்னை: ஆந்திரப் பிரதேசத்தில் புயலால் சேதமடைந்த மின்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தமிழக மின்வாரியத்தைச் சேர்ந்த 502 பணியாளர்கள், 5 நாட்களில் 2,343 சீரமைப்புப் பணிகளை நிறைவு செய்துள்ளனர்.
வங்கக்கடலில் உருவான அர்னாப், முரசு புயல்களால் ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மின்கட்டமைப்புகள் சேதமடைந்து மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சீரமைப்புப் பணிகளுக்கு தமிழகத்தின் உதவியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக முதல்வர் விஜய்யிடம் தொலைபேசி வாயிலாகக் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடந்த நவ.2-ம் தேதி 502 பணியாளர்கள் அடங்கிய 17 சிறப்புக் குழுக்களை ஆந்திராவுக்கு அனுப்பி வைத்தார். இதில் 46 அலுவலர்கள், 252 களப்பணியாளர்கள், 186 ஒப்பந்தத் தொழிலாளர்கள், 18 ஓட்டுநர்கள் இடம்பெற்றிருந்தனர். 35 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
நவ.3 முதல் 7-ம் தேதி வரை நடைபெற்ற சீரமைப்புப் பணிகளில், சேதமடைந்த 149 உயர் அழுத்த மின்கம்பங்கள், 36 தாழ்வழுத்த மின்கம்பங்கள் மாற்றப்பட்டன. சாய்ந்திருந்த 94 உயர் அழுத்த மின்கம்பங்கள், 29 தாழ்வழுத்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டன.
மின்கம்பிகள் மாற்றுதல், மின்மாற்றிக் கட்டமைப்புகளைச் சீரமைத்தல், மின்சேவை இணைப்புகளில் பழுதுநீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மின்பாதைகளுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் 485 இடங்களில் அகற்றப்பட்டன. இவ்வாறு மொத்தம் 2,343 சீரமைப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.