சென்னை: தமிழகத்தின் நீர்நிலைகளை சீரமைக்க விரும்பும் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள், இணையவழியில் எளிதில் தடையின்மை சான்றிதழ்களைப் பெறுவதற்காக ‘ஏரி’ இணையதளத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் நீர்நிலைகள் புனரமைப்பில் அரசுசாரா அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்பை ஊக்குவிக்க, இணையவழியில் தடையின்மை சான்றிதழ்களை பெறுவதற்காக நீர்வளத்துறையின் சார்பில் ‘ஏரி’ இணையதளம் (https://eri.tn.gov.in/) உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் இந்த இணையதளத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக சிறுதுளி, இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை, எக்ஸ்னோரா சர்வதேச அறக்கட்டளை, மெகா அறக்கட்டளை மற்றும் தானம் அறக்கட்டளை ஆகிய அரசுசாரா அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தடையின்மை சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.
அமைச்சர்கள் சீ.ரமேஷ், ஆர்.வீ.ரஞ்சித்குமார், தலைமைச் செயலர் மு.சாய்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பெருநிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) நிதியுதவியுடன் நீர்நிலைகளைப் புனரமைக்க விரும்பும் அரசுசாரா அமைப்புகளும், தன்னார்வலர்களும் பல்வேறு அரசு துறைகளிடம் தடையின்மை சான்றிதழ் பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் களையுமாறு முதல்வரிடம் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் 5 அரசு துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன. நீர்நிலைகளைத் தூர்வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல் அனுமதிக்கப்பட்ட சிறிய மேம்பாட்டு பணிகளைச் செய்தல் ஆகியவற்றுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம். இதனால், நீர்நிலைகளின் நீர்சேமிப்பு திறனும், செயல்பாடும் மேம்படும்.
தற்போதுள்ள நேரடி விண்ணப்ப முறைக்கு பதிலாக, இணையதளத்தின் மூலம் வெளிப்படையான, குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுக்கும் முறை அறிமுகமாகியுள்ளது.
தகுதியான விண்ணப்பங்களுக்கு 15 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்குவதே இதன் இலக்காகும். டிஜிட்டல் தொழில்நுட்பம், சிஎஸ்ஆர் நிதி மற்றும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் இம்முயற்சி, நீர்நிலைகளைப் புனரமைப்பதில் அதிக மானோர் பங்கேற்க வழிவகுக்கும்.
மாநில நீர்வள மேலாண்மை முகமையின் தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர், விண்ணப்பப் பரிசீலனை, துறைகளுடனான ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கான அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.