கோப்புப் படம்
சென்னை: பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில், தெற்கு ரயில்வேக்காக கடந்த மாதத்தில் மட்டும் 40 நவீன ரக எல்எச்பி பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
ரயில் பயணிகளின் பாதுகாப்பை அதிகப்படுத்தவும், வசதியான பயணத்துக்காகவும் சாதாரண பெட்டிகளுக்கு மாற்றாக, எல்எச்பி என்னும் நவீன பெட்டிகள் விரைவு ரயில்களில் பொருத்தப்படுகின்றன.
எல்எச்பி பெட்டிகள் சென்னை, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) தயாரிக்கப்பட்டு, பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
அந்த வகையில், தெற்கு ரயில்வேக்காக, கடந்த மாதத்தில் 40 எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் முக்கிய ரயில்களில் சாதாரண ரயில் பெட்டிகளை நீக்கி, எல்எச்பி என்னும் நவீன பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த பெட்டிகள் பொருத்தவரை சென்னை ஐசிஎஃப் ஆலையில் தயாரித்து வழங்கப்படுகின்றன.
கடந்த மாதம் தெற்கு ரயில்வேக்காக 40 எல்எச்பி பெட்டிகள் ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டுள்ளன. மன்னை விரைவு ரயில், சேது விரைவு ரயில், பராசூரன், ஏலகிரி, ஏற்காடு ஆகிய விரைவு ரயில்களுக்காக இந்த எல்எச்பி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.
ஐசிஎஃப் ஆலையில் தெற்கு ரயில்வேக்காக, நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை 478 பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். சென்னை ஐசிஎஃப் ஆலையில் நடப்பு நிதியாண்டில் 3,778 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.