

சென்னை: எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்க ஆளும்கட்சி திட்டமிட்ட செயல்பாடுகளை மேற்கொள்கிறது. எனவே, வைகோ, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பகிரங்க வாக்குமூலங்கள் அடிப்படையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இதில் எஃப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையில் திமுக மீண்டும் மனு அளித்துள்ளது.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு திமுக முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
‘சட்ட விரோத தூண்டுதல்கள், அரசியல் வாக்குறுதிகள், ஊழல் நடைமுறைகள் மூலம் திமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பதற்காக முதல்வர் விஜய், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச் சதி குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்து முழுமையான விசாரணை தொடங்க வேண்டும்’ என்று ஏற்கெனவே அளித்த புகாரில் கோரியிருந்தேன்.
பிறகு, திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்ட விரோத கைது, காவல் துறை கட்டாயப்படுத்துதல்கள் குறித்து ஆளுநரிடம் தனி மனுவை சமர்ப்பித்தோம்.
அதில், ‘காவல் துறையினர் தங்கள் அதிகாரத்தையும், அரசு இயந்திரத்தையும் துஷ்பிரயோகம் செய்து, அவரை பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணையுமாறு வற்புறுத்தினர்’ என்று குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில், அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜூலை 2-ம் தேதி நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில்,“ஆளும்கட்சி என்னை அணுகியது.
ராஜினாமாவைத் தொடர்ந்து அக்கட்சியில் இணை யப் போகிறேன்” என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். முந்தைய புகாரில் கூறப்பட்டுள்ள அதே பாணியில் ராஜினாமா செய்த ஒரு எம்எல்ஏவின் இந்த வாக்குமூலம், ஆளும்கட்சியால் மேற்கொள்ளப்பட்ட தூண்டுதல்களுக்கு நேரடி மற்றும் முதல்நிலை ஆதாரமாக அமைகிறது.
இதன்மூலம், அரசியலமைப்பு, தேர்தல் வழிமுறைகளுக்கு மாறாக, சட்டப்பேரவையின் கட்டமைப்பை மாற்ற 2 முக்கிய உத்திகள் கொண்ட திட்டமிட்ட செயல்பாட்டை ஆளும்கட்சி கையாள்வது தெளிவாகிறது.
முதலாவதாக, ராஜினாமா செய்ய ஒப்புக்கொள்ளும் எம்எல்ஏக்களுக்கு தேர்தல் ஆதரவு, நிதி உதவி, அரசாங்க சலுகைகள் போன்ற வாக்குறுதிகள் மூலம் தூண்டுதல் அளிப்பது; இரண்டாவதாக, மறுப்பவர்கள் மீது குற்ற வழக்குகளைப் பதிவு செய்து, கைது நடவடிக்கை மூலம் மிரட்டல் விடுப்பது. இந்த 2 வழிகளும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தாக்குகின்றன.
வாக்காளர்களின் தீர்ப்பை நிராகரிக்கின்றன. அரசியலமைப்பின் 10-வது அட்டவணையின்கீழ் உள்ள கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கட்டமைப்பை சீர்குலைக்கின்றன.
‘ஒரு தகவல் அறிக்கை மூலம் புலனாகும் குற்றம் நடந்திருப்பது தெரியவந்தால், எஃப்ஐஆர் பதிவு செய்வது கட்டாயம். சம்பந்தப்பட்ட நபர்களின் அந்தஸ்து, செல்வாக்கு அடிப்படையில் இதில் எந்த விதிவிலக்கும் கிடையாது’ என்று லலிதா குமாரி - உத்தர பிரதேச அரசு இடையிலான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது.
தற்போது ஆவணங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வைகோ, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரின் பகிரங்க வாக்குமூலங்கள், ஒட்டுமொத்தமாக முதல் தகவல் அறிக்கைபதிவு செய்யப்பட வேண்டியபுலனாகும் குற்றங்களை வெளிப்படுத்துகின்றன.
எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்து, விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவந்து, இதற்குப் பொறுப்பான அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.