சென்னை: மாநகராட்சி பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகளில் சிறப்பிடம் படித்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10,12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 1,085 மாணவ, மாணவியர், அதிக மதிப்பெண்கள் பெற உறுதுணையாக இருந்த 1,005 தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம், 2,090 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா, ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.
மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு, மாநகராட்சி பள்களில், 100 சதவீதம் தேர்ச்சி அளித்த 22 பள்ளிகள், 2 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 24 பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம், கல்வி ஊக்கத்தொகை வழங்கினார்.
மேலும், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்திய 34 பள்ளித் தலைமையாசிரியர்கள், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 293 மாணவர்களுக்கு தலா ரூ.1,500 வீதமும், பாடவாரியாக 100 சதவீதம் தேர்ச்சி அளித்த 391 ஆசிரியர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் வீதமும், ரொக்கப் பரிசுகளை வழங்கினார்.
இதேபோன்று 10-ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இவ்விழாவில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜி.எஸ்.சமீரன் இணை ஆணையர் க.கற்பகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.