கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத் துறையின்கீழ் சென்னை, மதுரை உட்பட 25 மாநகராட்சிகள் செயல்படுகின்றன. இதற்கிடையே மாநகராட்சிகளின் செயல்பாடுகளில் தனியார் பங்களிப்பானது அதிகரித்து வருகிறது.
அந்தவரிசையில் முதல்முறையாக பாதாளச் சாக்கடை திட்டங்களை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகத்துறை முடிவு செய்துள்ளது.
முதல்கட்டமாக மதுரை, நாகர்கோவில் ஆகிய மாநகராட்சிகளில் இத்திட்டத்தை அமல்படுவத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவனம் டெண்டர் வெளியிட்டுள்ளது.
அதில், இந்த மாநகராட்சிகளில் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ள ஏற்கெனவே கொள்முதல் மற்றும் கட்டுமானம் (இபிசி) முறையில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மதுரை மாநகராட்சியில் கழிவுநீர் கட்டமைப்புகளை சீரமைத்தல், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் கழிவுநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளிட்ட பணிகள் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
இதன்மதிப்பு ரூ.2,377 கோடியாகும். அதேபோல், நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை வசதியற்ற பகுதிகளில், 111 கி.மீ நீளத்
துக்கு கழிவுநீர் குழாய்கள், 19.93 கி.மீ நீளத்துக்கு கழிவுநீர் உந்துக் குழாய்கள், தேவையான உந்துநிலையங்கள் உள்ளிட்ட பணிகள் ரூ.189 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதையடுத்து தேர்வு செய்யப்படும் ஆலோசனை நிறுவன அறிக்கையை 5 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். முதல் 2 மாதங்களில் திட்டத்தின் சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் திட்டக் கட்டமைப்பு தயாரிக்கப்பட வேண்டும்.
அடுத்த 3 மாதங்களில் தனியார் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள் ரூ.50,000 முன்வைப்புத் தொகை செலுத்த வேண்டும்.
விண்ணப்பங்களை அக்டோபர் 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் நடைமுறைக்கு வந்தால், அதன் பராமரிப்பு, வரி வசூல் உள்ளிட்ட பணிகளிலும் தனியார் நிறுவனத்தின் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.