திருச்சி: புதுச்சேரி- மரக்காணம் இடையிலான பகுதியைக் கடந்த தீவிர தாழ்வுப் பகுதியால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி புதுச்சேரிக்கு தெற்கு பகுதியில் உள்ள மாவட்டங்கள் ஊடாக தெற்கு, தென்மேற்கு திசையில் நகரும்.
இது இன்று (டிச.3) முதல் 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதையொட்டியுள்ள உள் மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து, சாதாரண தாழ்வுப் பகுதியாகவோ அல்லது ஒரு காற்று சுழற்சியாகவோ செயலிழந்து, டெல்டா, தென் மாவட்டங்கள் ஊடாக அரபிக்கடலை நோக்கி நகரும்.
இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று அதிகாலை மற்றும் காலை நேரங்களில் மீண்டும் அதிகனமழை பெய்யும்.
ந.செல்வகுமார்
செங்கல்பட்டு மாவட்டத்தைவிட சென்னைக்கு சற்று கூடுதலாகவும், அதைவிட திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்னும் சற்று கூடுதலாகவும் மழைப்பொழிவு இருக்கும். வட உள்மாவட்டங்களிலும் மிதமானது முதல் கனமழை பெய்யும்.
மேலும் வரும் 4, 5-ம் தேதி களில் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் என அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும்.
வரும் 6,7-ம் தேதிகளில் புதிய காற்று சுழற்சியொன்று வட இலங்கை வந்து, தமிழகத்தில் மழைப்பொழிவைத் தீவிரப்படுத்தும். இது இலங்கைக்கு மீண்டும் அச்சுறுத்தலை கொடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.