திருச்சி: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நாளை (நவ. 28) முதல் டிச. 1-ம் தேதி வரை 4 நாட்களுக்கு இடைவிடாத மழைப்பொழிவு இருக்கும். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: இன்று தமிழகத்தின் தென் கடலோரம், டெல்டா கடலோரம் லேசான காற்றுடன் சாரல்மழை தொடங்கி, நாளை தூத்துக்குடி வடக்கு கடலோரம் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்கள், அதையொட்டியுள்ள திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மிதமான கடலை நோக்கிய காற்றுடன் மழைப்பொழிவு ஆரம்பிக்கும்.
படிப்படியாக மழைப்பொழிவை தீவிரப்படுத்தி வரும் 29, 30-ம் தேதிகளில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 48 மணி நேர தொடர் கனமழை மற்றும் மிக கனமழையைக் கொடுக்கும்.
வரும் 29, 30 மற்றும் டிச. 1-ம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களிலும் 48 மணி நேர தீவிர கனமழைப்பொழிவை கொடுக்கும்.
ந.செல்வகுமார்
குறிப்பாக, நாளை முதல் டிச. 1-ம் தேதி வரை 4 நாட்கள் இடைவிடா மழைப்பொழிவைக் கொடுத்து டெல்டா மாவட்டங்கள் முதல் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் வரை கடலோர மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.
தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் கிழக்குப் பகுதிகள் மற்றும் திருப்பத்தூரில் கனமழை இருக்கும். மேற்கு மாவட்டங்களில் மிதமான முதல் சற்று கனமழை வரை இருக்கும்.