நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்த இஸ்ரோ தலைவர் நாராயணன்.
நாகர்கோவில்: இந்தியாவில் ஆண்டுக்கு 50 ராக்கெட்களை விண்ணில் ஏவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத் (இஸ்ரோ) தலைவர் நாராயணன் கூறினார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: நிசார் என்பது நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து அனுப்பிய செயற்கைக்கோள்.
இதற்காக நாசா ரூ.10,300 கோடி செலவிட்டுள்ளது. இது பூமியின் வளங்களையும், நிலநடுக்கம் போன்றவற்றையும் கண்டறியவும் உதவுகிறது. நாசாவின் எல்-பேண்ட் எஸ்ஏஆர் பேலோட் மற்றும் இஸ்ரோவின் எஸ்-பேண்ட் எஸ்ஏஆர் பேலோட் ஆகியவற்றுடன் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த பேலோட்கள் மழை, மேகமூட்டம் போன்ற எந்த தட்பவெப்ப நிலையிலும், ஆண்டின் அனைத்து நாட்களிலும் படம் எடுக்கக்கூடிய திறன் கொண்டவை.விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பியது, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கூட்டு முயற்சியாகும்.
அவர்களது ராக்கெட் மூலமும், நமது ககன்யான் மூலமும் அனுப்பி, திரும்ப அழைத்து வந்துள்ளனர். 6,000 கிலோ எடையுள்ள ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வணிக ரீதியாக நமது ராக்கெட் மூலம் அனுப்ப திட்டம் உள்ளது, இது டிசம்பரில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, இஸ்ரோவின் 57 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்த 3 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை மூன்று மடங்காக அதாவது 150 செயற்கைக்கோள்களாக உயர்த்தும் நோக்கத்துடன் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது.
2027-க்குள் இந்தியாவின் ககன்யான் மூலம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கான திட்டம் உள்ளது. அதேபோல, இந்தியாவுக்காக 2035-ல் ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு முதல்கட்ட ஒப்புதல் கிடைத்துள்ளது.
மொத்தம் 52 டன் எடையுள்ள இந்த விண்வெளி நிலையம் 5 கட்டங்களாக அமைக்கப்படும். முதல்கட்டம் 2028-ல் அமைக்கப்படும். விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அதிகரிப்பது, துறையை பாதிக்காது.
இது, நல்ல மற்றும் பயனளிக்கும் திட்டமாகும். தற்போது ஒரு மாதத்துக்கு ஒரு ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில், ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.